Monday, January 8, 2018

எங்கள் உடை பச்சை

நாங்கள் பாதி மட்டுமே உடுத்தியிருந்தோம்
அது காவியில்லை, பச்சை.

நாங்கள் பேசிய மொழி
தேசியத்திற்குள் வராத தமிழ்.
எங்கள் தோலின் நிறம் கறுப்பு,
நிர்வாணமாக்கி அதையும் உறுதிப்படுத்திக் கொண்டீர்கள்.

நாங்கள் ஓட்டுச் சாதிக்காரர்களல்ல,
ஆண்மைக்குறைவினால் தற்கொலை செய்தவர்கள் போக
எங்கள் வாக்குச் சதவீதம் குறைவுதான்.

எங்களுக்கு வேறு குரல்கள் கிடையாது,
எங்கள் கரைவேட்டிக்காரர்களின் விரைகள்
நெறிபட்டுக் கிடக்கின்றன.

கோட்சேக்களின் வீதிகளில்
அரைநிர்வாணப் பக்கிரிகளாய் அமர்ந்திருந்தோம்.

நாங்கள் அறிவோம்,
அலைக்கற்றைகளின் அதீத வேகத்தில் காவி வளர்ந்து கொண்டிருக்கிறது தேசியக்கொடியில்.
அச்சாணி கழன்ற தர்மச்சக்கரத்தோடு எண்ணெய்க் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கின்றன வெள்ளையும் பச்சையும்.

எலிக்கறி தின்றோம்;
மாமிசம் உண்பவர்களென விலகிப் போனீர்கள்.
பாதித்தலை சிரைத்திருந்தோம்;
கழைக்கூத்தாடிகளெனக் கடந்தீர்கள்

நீங்கள் மண்ரொட்டி தின்னக்கூடாதென்றே
நாங்கள் மண்சோறு தின்றோம்.

நாளை
வாய்க்கரிசியும் இல்லாத நாளில்
எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
நாங்கள்
தமிழர்கள் இல்லை
இந்தியர்களும் இல்லை
வெறும் விவசாயிகள்.


தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் தீயில் எழுதியது.

எழுதிய நாள் : 17-ஏப்ரல்-2017

No comments:

Post a Comment