Monday, January 8, 2018

உருமாறும் தழும்புகள்

இரவல் சொற்கள் நிறைந்த பாடலாய்
அறைச்சுவரில்
தொங்கிக்
கொண்டிருக்கிறது
கண்ணாடி

நானோ
வேறு யாரோ பதிக்கும் முகங்களை
நொடிகளில் கழுவிடும்;
நினைவுகளைத் தூக்கிச்செல்லாத
சட்டகத்து ஆறு.

சில உருவங்களை மட்டும்
கண்ணாடிகள் உதிர்ப்பதில்லை
ஒட்டுப்பொட்டுகளின் பசையழுக்கைப் போல.

உருமாறும் தழும்புகளென பிம்பங்கள்
எப்போதும் அதனில்.

ஒளியில்லா இரவுகளில்
தனிமையின் அனந்த மலர்ச்சியை
இருள்வனத்துள் இசைத்தபடியிருக்கும்.

பிரதிபலிப்பது
சலிப்படைந்த நாளில்
மெல்லத் தன் ரசத்தை உதிர்க்கத் தொடங்கும் கண்ணாடி
ஓய்வுநாளில் உறங்கும் பரத்தையின் முகத்தில்
தன்னைப் பார்த்துக்கொள்ளும்.




எழுதிய நாள் : 13-டிசம்பர்-2017

இறுதிப்பாடல்

உங்கள் ஆறுதல் வார்த்தைகளை
வெளியே கழற்றிவைத்துவிட்டு
முதிர்ந்த நோயாளியின் அறைக்குள்
கவனமாக அடியெடுத்து வைக்கவும்.

அதீத இரைச்சல் கொண்டோ
அளவற்ற மௌனம் கொண்டோ
நோயாளியுள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
விவாதங்களைக் கலைத்துவிடாதீர்கள்.

சூன்யதிசையில்
தனியே நடந்துகொண்டிருக்கும் அவர்களை
உங்கள் இரக்கத்தின் குரல் மறிக்காதிருக்கட்டும்.

கயிற்று முறுக்கிலிருந்து பிரிபிரியாய்
பஞ்சாய் மாறிக்கொண்டிருப்பவர்களின் மீது
உங்கள் விசும்பலின் ஈரம்
சுமை ஏற்றாதிருக்கட்டும்.

கணக்குகள் சமன்படும் அந்த அறைக்குள்
உங்களுக்கான
இசைகோர்க்கப்படாத இறுதிப்பாடலின் வரிகளைத்
தடவிப் பார்த்துவிட்டுத்
திரும்புங்கள்
காத்திருக்கிறது உங்கள் வாகனம்.



எழுதிய நாள் : 29-நவம்பர்-2017

புனிதத்தீ

அத்தனை துளைகளிலிருந்தும்
ஒழுகிக் கொண்டிருக்கிறது மனம்
கருப்புக் கண்ணாடியால் கண்களை அலங்கரிக்கிறேன்
நெஞ்சின் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொள்கிறேன்
விரல்முனைகளில் தீயின் குட்டிகள் நெளிகின்றன
மணமூட்டியணிந்த வார்த்தைகளுக்குள்ளே
நெறிக்கும் காமம் காத்திருக்கிறது.
இறைப்பாசுரங்களைப் பாடியபடி திரிகள் ஏற்றப்படுகின்றன
விட்டில்களை மறுத்து முகம் திருப்பித் திரும்புகின்றன சுடர்கள்
விளக்கின் அடியிருட்டுக்குள் பதுங்கியிருக்கிறது அது
திரியின் புனிதம் போற்றுதும்
விட்டிலின் பிணங்களைத் தூற்றுதும்.



எழுதிய நாள் : 28-நவம்பர்-2017

எண்களின் மரம்

அவளுக்கு எண்களைப் பிடிப்பதில்ல
எண்ணிக்கையில் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை
பிறந்த தேதிகளும் நினைவிலிருப்பதில்லை
செங்கோடையில் பிறந்தவன் நீ
தண்பனியில் பிறந்தவள் நான் என்பாள்
அவள் மச்சங்களை நான் எண்ணுகையில்
பறவைகள் நட்சத்திரங்களை எண்ணுவதில்லை என்பாள்
அந்த நீண்ட முத்தத்தின் பின்
இருபது நிமிட முத்தம் என்றேன்
மழையைத் துளிகளால் அளக்காதே என்றாள்
எத்தனை நாட்கள் தனித்திருந்தோம்?!
என்ற என் ஆயாசக் கேள்விக்கு
நமக்கிடையே ஓங்கிப் பெருத்த மரம் இருந்தது
எனச் சொல்லிய அவள் பெருமழையானாள்.
பறவை உயரே பறக்கத் தொடங்கியது.
ஒரு விதையாய்ச் சுழிந்து ஒடுங்கியது
எண்களின் மரம்.


{டிசம்பர் மாத அச்சாரம் இதழில் பிரசுரமானது}

எழுதிய நாள் : 20-நவம்பர்-2017

நூல் கொலை

எத்தனை பேரைக் கொலை செய்வாள் அவள்?
படிப்பு ஒன்றே வாழ்க்கை என்று சொன்ன அப்பனை
பெரிய கனவுகளைத் தின்று ஊட்டிய அண்ணனை
அவள் சுடர் வாங்கி ஓடக் காத்திருந்த இளம் திரிகளை
பாதி வரை ஆட்டத்தில் சேர்க்காத மனுவின் பிரதிகளை
ஓடிய கால்களை இடறிய தந்திரப் புனிதர்களை
தூண்டில் திருடும் கஞ்சி வேட்டிப் புழுக்களை
செய்தித்தாள்களில் அழுது மறக்கும் என்னை உன்னை
மாற்றுப் பாதையில் அலுவலகம் சேரும் உன்னை என்னை
இன்னும் இன்னும் இன்னும்……
நாற்கரச் சாலைகளையொத்த நீண்ட பட்டியல்
அவளுக்குத் தெரிந்ததை மட்டும் செய்து வந்தாள்
இன்று
அவளால் இயன்றதை மட்டுமே செய்தாள்
ஆம்
அவளால் அத்தனை பேரையும் கொல்ல முடியாது.


நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.

எழுதிய நாள் : 05-செப்டம்பர்-2017

அனிதா

என்ன பாப்பா நீ
இப்படிச் செஞ்சுட்ட?

நீதிமன்றத்து மொதப்படியில நீ நின்ன,
தெம்பாயிருந்தோம்.
காலுல சிக்குன அந்த நூல
அறுத்தெறிஞ்சிருவன்னு இருந்தமே
கழுத்த நெறிச்சிருச்சே பாப்பா.

வெள்ளக் கோட்டுக் கனவெல்லாம்
கருப்புப் போஸ்டரா ஒட்டிக் கெடக்குதே பாப்பா
இப்படிக் கருப்புச் சேதியா வர்றதுக்கா
அம்புட்டுக் கனவு?!

நாங்கெல்லாம் சொரணை கெட்டவிங்கன்னு
தெரிஞ்சு போச்சா ஒனக்கு?
ரோஹித்துக்கும் முத்துக்கிருஷ்ணனுக்கும்
நாங்க என்ன செஞ்சோம்னும்
தெரிஞ்சு போச்சு ஒனக்கு
அப்படித்தான பாப்பா?

ஒம்மேல நம்பிக்கையில்லாம
நீ செத்துட்டன்னு சொல்றாய்ங்க.

நீ மாண்டுக்கிட்டது
எங்க மேல நம்பிக்கையில்லாமத்தான பாப்பா?

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.

எழுதிய நாள் : 02-செப்டம்பர்-2017

மீதமிருக்கும் கதை

இன்னும் ஒரே ஒரு கதைதான் மீதமிருக்கிறது
என் பிற கதைகள் அத்தனையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்
அதை நான் சொல்லும்போது
உங்கள் கண்களில் எனது நிறம் வேறொன்றாய் மாறும்
உங்களைச் சுற்றியோடும் காற்றின் வெப்பம் வேறுபடும்
அந்தக் கதையை
விஷம் கலந்த மதுவை நாம் பருகிக் கொண்டிருக்கும்போதோ
சர்க்கஸ் துப்பாக்கியை உங்கள் கையில் கொடுத்த பின்னரோ
உங்கள் கல்லறை மீது படிந்துள்ள தூசியைத் துடைத்தவாறோ
நான் சொல்வேன்.
நிலைக்கண்ணாடியின் பளபளப்பு வார்த்தைகள் கொண்ட
அக்கதையை
எப்போது சொல்லவேண்டுமென முடிவெடுத்துக்கொள்ளுங்கள்
ஏனென்றால்
அது உங்கள் கதைதான்.




எழுதிய நாள் : 04-ஜூலை-2017

ஆயுதம்

என் ஆத்ம நண்பர்களே
யாரும் யூதாஸாய் மாறி
என் கன்னத்தில் முத்தமிட வேண்டாம்
என் கோப்பையில்
ஹெம்லாக்கை புன்னகையுடன் பரிமாறவேண்டாம்
கற்பனை மீறிய ஆயுதங்களோ
இயல்புக்கு மீறிய தந்திரங்களோ தேவையில்லை.
வந்தமர்ந்து என் தோள்களில்
கைபோட்டு அணைத்துக் கொள்ளுங்கள்
அற்புதமான உங்கள் புன்னகையை
என் அறை முழுக்கப் பரவவிடுங்கள்
நான் மெல்ல உங்கள் தோள்களில் சாயும்போது
சிகரெட் சாம்பலைத் தட்டிவிடுவது போல்
உறங்கிக் கொண்டிருக்கும் தொட்டில் குழந்தையை
கிள்ளி விடுவது போல்
எனக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியின் திரியை
மெல்லக் கிள்ளி விடுங்கள்
அது ஒன்றே போதும்
என்னை இயல்பாகக் கொல்வதற்கு.




எழுதிய நாள் : 29-ஜூன்-2017

படிமம்

ஆணியில்
தொங்கவிடப் பட்டிருந்த
செவ்வக வானத்தில்
அந்தப் பறவை
பறந்துகொண்டிருக்கிறது
அதே நாளின் வெளிச்சத்தோடு...


எழுதிய நாள் : 28-ஜூன்-2017

காலத்தின் பிசின்

நத்தையூர்ந்த மணல்தடத்தில்
குமிழ்ந்தூறும்
என்றோ புதைந்த முத்தங்கள்

ஆவியாகாத முத்தப் பொழுதுகளின் ஈரம்
பிசினாய் சுரக்கும்
பச்சையம் இற்ற கிளைகளில்

கருநாக விஷத்தின் அதிதூய்மையுடன்
ஒரு முத்தம் உறைந்திருக்கிறது
படிமமாய்க் கிடக்கும் ஆதிமனிதனின் உதடுகளில்

அருகில் இல்லாத போதில்
காற்றில் உதிர்க்கப்பட்ட முத்தங்கள்
மகரந்தம் பூசிய கால்களால்
காற்றில் வரைகின்றன உதட்டுக் கோடுகளை

இறுக்கிப்பிணைத்த விரல்களுக்கிடையில்
சத்தமின்றி கடத்தப்படுகிறது
முத்தம் ஒன்று.

பரிசுத்தமான ஒரு முத்தம்
உதடுகளில் இருக்கிறது
இன்னும் தரப்படாமலே



எழுதிய நாள் : 24-ஜூன்-2017

பரிமாணங்கள்

பிம்பங்கள் பதியாப் பார்வை
காலத்தை எரிக்கும் ஆழப்பெருமூச்சு
கறுத்த மௌனம்
பார்வை கலைத்தெறியும் தலையசைப்பு
சொற்களை நகரவிடாத விரல்களின் இறுக்கம்
ஏதாவதொன்றில்
கணத்தைக் கரைத்துக்கொண்டேயிருக்கிறது மனம்
கண்ணீர் ஒன்றே அழுகையில்லை.


எழுதிய நாள் : 21-ஜூன்-2017

நினைவின் தடம்

பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
மரத்தடியில்
மௌனமாக நிற்பவன்
பழைய பாதையொன்றில்
நடந்து கொண்டிருக்கிறான்.



எழுதிய நாள் : 21-ஜூன்-2017

மழையின் நாள்

அந்த இரண்டு நாட்களுக்கிடையில்
மழையைத்தவிர வேறொன்றும் இல்லை
மழையின் றெக்கைக்குள்ளிருந்து
வந்து விழுந்ததுதான் அந்த நாள்
மழையெழுப்பிய சிறுகுன்றுகள் மீது
ஏறவியலாது விழுந்தன
பேசியிருக்க வேண்டிய வார்த்தைகள்
அந்த நாளின் மீது படர்ந்த ஒரு விதை
மழையின் பச்சை குடித்து
வேர்களில் வெம்மை கொண்டது
மற்றொரு மழை வந்து தூக்கிப் போகும் வரை
நேற்றும் ஆகாமல் நாளையும் ஆகாமல்
அது
அங்கேயே கிடக்கும் அந்த நாளாகவே
அந்த நாளின் மீது இடறும்
கால்களில் ஒட்டிக்கொள்ளக்கூடும்
அதனுள் கிடக்கும்
தரப்படாத முத்தமும்
முளைத்துக்கொண்டிருந்த ஒரு கத்தியின் கூர்முனையும்.


எழுதிய நாள் : 20-ஜூன்-2017

பெயர்கள்

அவன் கவிஞன், வசீகரன்,
நண்பன், ஓவியங்களில் பெருவிருப்பம்,
பேச்சால் மயக்குபவன்,
போதையின் உச்சத்தில்
தெரு நாய்களுடன் அமர்ந்து அழுதவன்,
கையில் குழலில்லாத
கிருஷ்ணன் சிலையிடமிருந்து விலகாது நின்றவன்,
வெள்ளைப்பல் கறுப்பழகியின் சிரிப்பை
இன்றுவரை சுமந்து திரிபவன்,
நெற்றியின் ஒற்றை முத்தத்தில்
நெருப்பைக் கண்ணீராக்கியவன்,
பிரகாரத்தில் கண்டவளின் உடலுடன்
சுயபோகம் கொண்டவன்,
சில கண்ணீர்த்துளிகளையும் சிரிப்பினையும்
வரும் நாளைக்காய் சேர்த்து வைத்திருப்பவன்,
ஒருவரையும் இவ்விதம்
நினைவில் கொள்ளத்தேவையில்லை
அவரவர் பெயர்களால்
அவர்களைக் கொலை செய்வோம்.




எழுதிய நாள் : 15-மே-2017

கண்ணீர் என்பது

சிரிப்புப் பரல்கள் சிதறிக்கிடக்கும் காரை உதிரும் வீடு
இறுதி உரையாடலின் போது ஒலித்த விருப்பப்பாடல்
கைவிட்டுப்போனதின் நகல் பத்திரம்
புகைப்படத்தின் முன் வைக்கப்பட்ட முதல் சம்பளம்
துரோகம் நினைவுறுத்தும் ராத்திரியின் அரக்க நிசப்தம்
குலதெயவத்தின் முன் வைக்கப்பட்ட பாஸ்போர்ட்காரனின் அரபுக் கனவுகள்.
நெடுந்தகிப்பைத் தணித்த புணர்வின் உச்சம்.
இவைதான்.
எல்லாமும் தான்.
கண்ணீர் என்பது வெறும் திரவம் அல்ல.


எழுதிய நாள் : 13-ஏப்ரல்-2017

காலத்தின் துளி



காலடிச் சுவடுகளை
புதர்கள் சூழ்ந்து விட்டன
வாழ்க்கையின் கூர் வடிவங்கள்
இடரப்போவதில்லை இனி.
திசைகாட்டிகள் தேவையற்ற
பாதையில்
காலக்கடலின் முகத்துவாரத்தில்
நகர்ந்து கொண்டிருக்கிறது
காலத்தின் மற்றோர் துளி.


எழுதிய நாள் : 13-ஏப்ரல்-2017

ஒளிப்படம் : ஜெயேந்திரராஜன்

எங்கள் உடை பச்சை

நாங்கள் பாதி மட்டுமே உடுத்தியிருந்தோம்
அது காவியில்லை, பச்சை.

நாங்கள் பேசிய மொழி
தேசியத்திற்குள் வராத தமிழ்.
எங்கள் தோலின் நிறம் கறுப்பு,
நிர்வாணமாக்கி அதையும் உறுதிப்படுத்திக் கொண்டீர்கள்.

நாங்கள் ஓட்டுச் சாதிக்காரர்களல்ல,
ஆண்மைக்குறைவினால் தற்கொலை செய்தவர்கள் போக
எங்கள் வாக்குச் சதவீதம் குறைவுதான்.

எங்களுக்கு வேறு குரல்கள் கிடையாது,
எங்கள் கரைவேட்டிக்காரர்களின் விரைகள்
நெறிபட்டுக் கிடக்கின்றன.

கோட்சேக்களின் வீதிகளில்
அரைநிர்வாணப் பக்கிரிகளாய் அமர்ந்திருந்தோம்.

நாங்கள் அறிவோம்,
அலைக்கற்றைகளின் அதீத வேகத்தில் காவி வளர்ந்து கொண்டிருக்கிறது தேசியக்கொடியில்.
அச்சாணி கழன்ற தர்மச்சக்கரத்தோடு எண்ணெய்க் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கின்றன வெள்ளையும் பச்சையும்.

எலிக்கறி தின்றோம்;
மாமிசம் உண்பவர்களென விலகிப் போனீர்கள்.
பாதித்தலை சிரைத்திருந்தோம்;
கழைக்கூத்தாடிகளெனக் கடந்தீர்கள்

நீங்கள் மண்ரொட்டி தின்னக்கூடாதென்றே
நாங்கள் மண்சோறு தின்றோம்.

நாளை
வாய்க்கரிசியும் இல்லாத நாளில்
எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
நாங்கள்
தமிழர்கள் இல்லை
இந்தியர்களும் இல்லை
வெறும் விவசாயிகள்.


தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் தீயில் எழுதியது.

எழுதிய நாள் : 17-ஏப்ரல்-2017

Friday, January 5, 2018

சொல்லாத வார்த்தைகள்

சொல்லாத வார்த்தைகளின்
முடைநாற்றத்தால்
நிறைந்திருக்கிறேன் நான்.

நிறுத்தத்தைத்
தவறவிட்ட பயணியைப்போல்
என்னுடனே பயணிக்கின்றன
பல வார்த்தைகள்.

இரத்தம் பொங்கும் சில வார்த்தைகள்,
கடைசிச் செங்கல்லாய் சில,
தீட்டிய கூர்மையுடன் சில,
வீட்டுச் சுவற்றைத் தாண்டவிடாத
முரட்டுச் செல்லப் பிராணியைப்போல் சிலவென,
அவை
எனக்குள் ஊர்ந்துகொண்டேயிருக்கின்றன.

கனவாய் ஆவியானவை,
கனவை ஈரமாக்கியவை போல
தனிமைப்பொழுதுகளில்
கண்கள் வழியே சில வெளியேறி
என் சுமையைச் சற்றே குறைக்கின்றன.

ஆயினும்
இன்னும் வெளியேறாத வார்த்தைகள்
என் குரல்வளைக் காற்றை
விழுங்கியபடியிருப்பதை
கையறு மௌனத்தோடு பார்த்திருக்கிறேன்.

இந்தக் கவிதையிலும் கூட
சொல்லாத பல……



எழுதிய நாள் : 23 மார்ச் 2017

நிறை காலி

காலிகளால் நிறைந்திருக்கிறது
பிரபஞ்சக் குடுவை.
வந்து பெருகி காலியாகிப்
போவதில்
என்ன நிறைந்திருக்கிறது??



எழுதிய நாள் : 20 மார்ச் 2017

நீநான்நீ

கண்ணீரும் இல்லை மென்னகையும் இல்லை
சேரவும் இல்லை விலகவும் இல்லை
உன்னுள்ளும் இல்லை வெளியிலும் இல்லை
நீயாகவும் இல்லை நானாகவும் இல்லை
நான்நீநீநான்நீ.


எழுதிய நாள் : 20 மார்ச் 2017