Thursday, January 4, 2018

என் பயணங்களில்…

மூன்று இருக்கைகள் முன்னே
அமர்ந்து உறங்கிக் கொண்டிருப்பவள்
உன்னைப்போலவே சேலையணிந்திருக்கிறாள்,
அவளுக்கும் உனதைப்போலவே கூந்தல்.
சற்றே தெரியும்
கன்னக்கதுப்பிலும்
வேகத்தடை ஏறிஇறங்கையில்
ஆடும் காதணியிலும்
மெல்ல மெல்ல
நீயாகவே மாறிக்கொண்டிருக்கிறாள்.
எனக்கும் அவளுக்குமிடையே
ஊர்ந்துகொண்டிருக்கும்
புலப்படாத நதியொன்றில்
படகுகளாய்த் திரிகின்றன
நீ நிரம்பிய என் நாட்குறிப்பின்
காகிதங்கள்.
நமக்குப் பிடித்த பாடல்
ஒலிக்கத் தொடங்கும் கணத்தில்
முற்றிலும் நீயாய் மாறிவிட்ட அவள்
என்புறம் திரும்பிப் பார்க்கும் முன்
இந்தப்பயணம் முடிந்துவிட வேண்டும்
அல்லது.




எழுதிய நாள்: 24-அக்டோபர்-2016

No comments:

Post a Comment