Friday, December 11, 2015

நதியே உன்னை...

வீதி தாண்டி வீட்டுக்குள் புகுந்தாய்,
வீட்டை மூழ்கடித்து
வீதியில் நிறுத்தினாய்,
அகதியாவதின் அவலம்
இரண்டே நாட்களில் சொல்லிப்போனாய்,
சாவும் ஒரு சம்பவமன
பிணமாக்கி உருட்டி விளையாடினாய்,
மலக்கழிப்பையும்
மாதக்கழிப்பையும்
கொடூரமாக்கினாய்.
இதுதான் நீ.
இது நீ ஆடிய தடம்,
சிறிது ஆடிப்போயிருக்கிறாய்.
போனால் போகிறது....
ஆனால்
எம் வீட்டுப்
பச்சைப்பிள்ளைகளை
வண்டிகளின் பின்னால்
கையேந்தி ஓடவைத்தாயே,
சண்டாளி
அதைத்தானடி
தாங்கிக்கொள்ள முடியவில்லை.

Monday, August 3, 2015

நீ வரும் சகுணம்

உன்னோடு பேசுவதற்கு
இந்த இடம்தான் வாய்த்திருக்கிறது
அல்லது இதைத்தான்
நான் தோ்ந்திருக்கிறேன்.

சூாியனும் அலையும் நெய்து கொண்டிருக்கும்
மாலைச் சமுத்திரத்தில்
இவ்விடத்தின் தற்கொலைகள் சில  
என் நினைவில் வந்து போகின்றன.

உடைந்துகிடக்கும் சில்லுகளில்
மதுப்புட்டியின் முழுப்பாிமாணத்தைக்
கோா்த்துக்கொண்டிருக்கிறேன்

நீ வரும்முன்
பெரும்பாறைகளைப் புரட்டிப்போட்டு
என்னை மூழ்கடிக்கும் பேரலை வரலாம்
அல்லது
கீழே கிடக்கும் குறியுறையை
மொய்க்கும் எறும்புகளைப்போல்
பூமி வெறுமனே சுழன்றிருக்கலாம்.

இருட்துளைக்குள்
தன்னைப் புகுத்திக்கொண்ட
இந்த நிலத்தில் புதைந்த
நம் முத்தங்களின் மீது
ஊா்ந்து திாிகின்றன இணை நண்டுகள்.

சோம்பிக்கிடக்கும்
நாய் ரோமங்களுக்கிடையே ஊறும் உண்ணிகள்
காரணமின்றி
உன் கூந்தலையும் என் விரல்களையும்
நினைவு கூட்டுகின்றன.

உன்னுடைய வரவை
உறுதிசெய்யும் எந்தச் சகுணமும்
இத்தனை ஆண்டுகளைப்போல்
இன்றும் இல்லை.
இருந்தும்
உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதற்காய்
இந்த இடம்தான் வாய்த்திருக்கிறது.

Wednesday, July 15, 2015

தாிசனம்

மந்திரங்கள் செபித்தபடி நடந்தவள்
அலறிக்கடந்த ஆம்புலன்ஸின் திசைநோக்கி
உதட்டசைவை நிறுத்திய சிறுபொழுதில்
கடவுளைத் தொட்டு மீண்டாள்.

Tuesday, January 6, 2015

அதனால்தான் நீ

உன் கண்ணில் நிறைந்து வழியும் புன்னகை,
என் குரல் குடிக்குமுன் இதழ் ஈரம்,
கோா்க்கும் உன் விரலின்
நகக்கரை தாண்டித்தளும்பும் பிாியம்,
என் அணைப்பிற்கென்றே
முகிழ்த்திடும் உன் கழுத்தோரப் பூக்கள்,
இவையேதுமற்ற பெருந்தொலைவில்
நிசியைத் தாண்டிய
இருளின் காற்றில் தவழ்ந்து
கண்ணீா் துளிா்க்கச் செய்யும்
பாடலாய் நீயிருப்பாய் என்னோடு.