Monday, August 3, 2015

நீ வரும் சகுணம்

உன்னோடு பேசுவதற்கு
இந்த இடம்தான் வாய்த்திருக்கிறது
அல்லது இதைத்தான்
நான் தோ்ந்திருக்கிறேன்.

சூாியனும் அலையும் நெய்து கொண்டிருக்கும்
மாலைச் சமுத்திரத்தில்
இவ்விடத்தின் தற்கொலைகள் சில  
என் நினைவில் வந்து போகின்றன.

உடைந்துகிடக்கும் சில்லுகளில்
மதுப்புட்டியின் முழுப்பாிமாணத்தைக்
கோா்த்துக்கொண்டிருக்கிறேன்

நீ வரும்முன்
பெரும்பாறைகளைப் புரட்டிப்போட்டு
என்னை மூழ்கடிக்கும் பேரலை வரலாம்
அல்லது
கீழே கிடக்கும் குறியுறையை
மொய்க்கும் எறும்புகளைப்போல்
பூமி வெறுமனே சுழன்றிருக்கலாம்.

இருட்துளைக்குள்
தன்னைப் புகுத்திக்கொண்ட
இந்த நிலத்தில் புதைந்த
நம் முத்தங்களின் மீது
ஊா்ந்து திாிகின்றன இணை நண்டுகள்.

சோம்பிக்கிடக்கும்
நாய் ரோமங்களுக்கிடையே ஊறும் உண்ணிகள்
காரணமின்றி
உன் கூந்தலையும் என் விரல்களையும்
நினைவு கூட்டுகின்றன.

உன்னுடைய வரவை
உறுதிசெய்யும் எந்தச் சகுணமும்
இத்தனை ஆண்டுகளைப்போல்
இன்றும் இல்லை.
இருந்தும்
உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதற்காய்
இந்த இடம்தான் வாய்த்திருக்கிறது.