Tuesday, June 1, 2010

என்னைக் கொன்றவன்

சிதைந்து கிடந்த என் மீது
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தேன்.
சுற்றிலும் கிடந்தன
நாக்குகள் உதிர்ந்த என் நாட்கள்,
விசாரணைச் சாட்சிகளாய்.

அவன், இவன்,
அவள், இவள்,
மனை, அலுவல்,
பகல், இரவு....
வேறு வேறு வில்லைகளில்
வேறு வேறு நிறங்களில்
இருந்ததாம் என் மொழியின் நீட்சி.

சூழ்ந்த வில்லைகள்
வளையமாய் நெருக்கிய
ஒரு பொழுதில்
என்னைக்காட்டும்
மொழியற்றுப்போன பித்தில்
என்னை நானே
கொன்று போட்டதாய்
முடிவுற்றது விசாரணை
சாட்சிகளின் ஆதாரத்துடன்.