Thursday, November 27, 2014

என் உரையாடல்

எப்போதும் ஒரு உரையாடல்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது எனக்குள்.

பனையேறியின் காய்த்த ரேகைகளால்
தோல்பரப்பை அழுந்தத் தேய்த்துக்கொள்கிறேன்;
துளைகளற்ற தோலோடு
விளம்பரப் பொம்மைகளின் உள்ளிருப்பவனின்
வியா்வையாய் ஊா்ந்து கொண்டிருக்கின்றன
வாா்த்தைகள்.

மொசைக் தரையின் குழப்ப ஒழுங்கில்
என் புறப்பிம்பத்தைப் பின்னிக்கொண்டிருக்கின்றன
கண்ணாடித் தொட்டியுள் நீந்தியழியும்
என் மீன்கள்.

கவாத்துக்குத் தப்பி வெளியேறும்
சில கிளைகளையும்
காலொடிந்த புன்னகையாய்
உருப்பெயா்க்கும் என் உதடுகள்.

சுயபோகத்திற்கான ஒரு மூடிய அறையென
ஊடுபரவாச் சவ்வாக
ஏற்பாடு செய்து கொண்டேன் என்னை.

உரையாடல்களற்ற
இந்த மலட்டு உதடுகளை
கண்ணகியின் முலையென
அறுத்து வீசியென்னை
எாித்துவிடத் துடித்ததில்லை ஒருநாளும்.