Wednesday, August 15, 2018

நிலத்தடித்தாகம்

கீழும் மேலுமாய் ஊரும்
எறும்புகளின் கால்களில் பொடிகின்றன
குளத்தங்கரை ஓரத்தில்
நாம் செய்து வைத்த களிமண் சிலைகள்

காசு வைத்துப்பின்னிய மோதிரத்தின்
வண்ண நரம்பின் பின்னல்கள்
சாயமிழந்து தளர்ந்திருக்கின்றன

நிறைந்திருக்கும் பெட்டியின் அடியில்
மடிப்புக் கலையாத உன் மேலாடை
சாரம் குறைந்த உன் வியர்வை மணத்தோடு

பழகிய தடங்கள்
மங்கலானதின் பெரும்பாரம்
நுகத்தடித் திமில்களில் வதை கூட்டுகிறது.

கருப்புப்பறவை கொத்தித் தின்றது போக
மீதி விதைத் தானியங்கள்
வேர்விடக் காத்திருக்கின்றன
முத்தங்களின் ஈரத்தில்

வற்றிய குளத்துச் சேற்றில்
மூச்சைச் சேமிக்கின்றன
கடைசிச் சந்திப்பின் சொற்கள்

நிலம் மூடிய நீர்ப்பாதையின் வெம்மையைக்
கடக்கும் மேகங்கள்
தணிப்பதில்லை.

இன்மையை முழுமையாக்க
கொஞ்சம் வலுத்த காற்று
அல்லது
இன்னும் கொஞ்சம் எண்ணெய்யின் ஈரம்.

காத்திருக்கிறது
அரசமரத்தடி அகலின் சுடர்.





எழுதிய நாள் : 14-ஆகஸ்ட்-2018

மரணம் தொடங்கும் கணம்

ஊர் முழுக்கச் சேதி சொல்லிவிட்டு
பழகிய வீட்டு நாய் போல
வாசலில்
கழற்றிய செருப்புகளுக்கு நடுவே
தண்மையாகப் படுத்துக்கொள்கிறது.
பூமாலைகளிலிருந்து சொட்டும்
நீர்த்துளிகளைத் தன்
வறண்ட நாவால் நக்கியபடி காத்திருக்கிறது.
ஓலங்களையும் கண்ணீரையும்
அரைக்கண் பார்வையால்
சுவாரசியமின்றிப் பார்க்கிறது.
இன்று சுமையான உடலை
தூர எறிந்து
கூட்டம் கலைந்து
பின்
கழுவிய கூடத்தில்
எரிகின்ற ஒற்றை விளக்கின்
சுடரிலிருந்து
வீடு முழுக்கப் பரவுகிறது
மரணம்.


எழுதிய நாள் :  2015ல் ஒரு நாள்

ஆற்றின் மொழி

வெள்ளம் ஆடிச்சென்ற மணற்சுழியுள்
பாதி நாட்களைப் புதைத்துக் கிடக்கிறது
என் நாட்குறிப்பு.
நாட்குறிப்பின் பக்கங்களின் மீது
ஆற்றின் அகன்ற சக்கரங்கள்
வரைந்த குறுமணல் ஓவியம்.
எழுத்துக்களை இழுத்துச்சென்ற ஆறு
வெற்றுப் பக்கங்களையும்
செந்நிறத்தில் முற்றுப்பெறாத சில
கவிதைகளையும் விட்டுச்சென்றிருக்கிறது.
ஆறடித்துச்சென்ற எழுத்துக்களை மீட்டு
பழைய சாயலில்
ஏதோ ஒன்றாய் முடித்துக்கொள்வேன்.
எழுதிய கவிதைகளை நிறைத்துவைக்க
மீண்டும் வருமா
அந்த ஆறு?


எழுதிய நாள் : 2013 ல் ஒரு நாள்

வெம்மை மணக்கும் காற்று

இலை தின்ற மரத்தின்
இலை தளிர்க்கையில்
கிளை மாறி அமர்கிறது காலம்

ஓடிக்கடக்கும் ரயிலின் சிறுபொழுது நிழல்
தண்டவாளத்தில் பரந்திருக்கும்
காய்ச்சல் தணிக்கும்.

ஈரம் உலர்ந்த துணிகள் கிடந்த
கயிற்றுத் தந்திகளில்
வெம்மை மணக்கும் காற்று இசைக்கிறது
தனிமையின் பாடலை

இறுகக் கட்டிய
நார் முடிச்சுகளில் திறக்கும் மொட்டுகள்
வண்டுகளுக்கு அனுப்புகின்றன
புது முகவரியை

மண்ணைத்தொட்ட விழுதுகளில்
கடந்த காற்றின்
வியர்வைப் படிவு.

காக்கைகளின் திறந்த வாய்களில்
பசியாற்றிக் கொள்ளும்
கூரைப் பருக்கைகள்

வடிவங்களைத் தூர்த்துப் பாயும்
நீர்மையாம்
தகிக்கும் பசி.



எழுதிய நாள் : 30-ஜூலை-2018

நிறம்


இரவுக்கு வேறு வேறு நிறம்
கவிதைக்கு வேறு வேறு அர்த்தம்
காட்சிக்கு வேறு வேறு மொழி
ஒன்றும் இன்னொன்றும்
வேறு வேறு இல்லை.




ஜெயேந்திரராஜனின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 26-ஜூலை-2018

காலத்துகள்கள் வழியும் மணற்குடுவை





கோப்பைகளை நிறைத்த குடுவை
காற்றால் நிறைந்திருக்கிறது.

காலத்துகள்கள் வழியும் மணற்குடுவை
காத்திருக்கிறது
இன்னும் சிலமுறை
நிரம்புவதற்கும் காலியாவதற்கும்

நிறைதலும் குறைதலும்
பெரும்பழத்தின் இரு கீற்றுகள்

திருப்பப்படும் மணற்குடுவையின்
ஒரு நுண்மைப்பொழுதில்
இல்லாது
இருக்கிறது காலம்

கடந்தவற்றை உறிஞ்சிய பஞ்சுப்பொதி
காற்றின் மிதவெப்பத்தில்
எடை உதறிக்கொள்கிறது

வாகனம் வந்து சேர்வதற்குள்
காட்சிகளின் புகைமூட்டத்திலிருந்து
விலகி
சிறிது மூச்சு வாங்கிக் கொள்வதே
இளைப்பாறல், பிழைப்பு.


ஜெயேந்திரராஜனின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 11-ஜூலை-2018

திரிந்த நிறமிகள்

நினைவுகளின் நிறமிகள்
திரிந்து போன நாட்களில் நீ வந்தாய்.
கூர்த்த சிலவற்றை மழுங்கச்செய்திருந்தேன்
வனத்தில் நீந்திய வேர்களைத்
தொட்டிகளுக்குள் அமிழ்த்தியிருந்தேன்
உன் அதிர்வுகள் பதிந்த நிலமிது.
உன் எச்சங்களைத் தேடி நீ வந்திருப்பாய்
உன்னை இழுத்துவந்த தாழம்பூ மணத்தால்தான்
என் அறைநாற்றம் போக்கிக்கொண்டிருக்கிறேன்.
உன்னிலிருந்து நான் வெகுதூரகாலம் விலகியிருக்கிறேன்.
நீ நீயாகவே இருந்தாய்
உன் பலத்தின் மீது என் பயம் இருந்தது
என் ஆயுதமும் இருந்தது.

உன் சிதைந்த தலையிலிருந்து இரத்தத்தோடு ஒழுகும்
நினைவுகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
மாறாபயத்தோடு.
பொழிகாட்டின் ஒற்றையடிப்பாதையென
நீண்டு கிடக்கும் உன்னைத்
தூக்கியெறியத் தவித்திருக்கிறேன்.

என்னை ஏளனம் செய்கிறாய்
சுழிக்கும் உதடுபோல்
அசையும் உன் வால் நுனியால்.




எழுதிய நாள் : 02-ஜூலை-2018

மெய்ம்மைகளின் நாளை




புறமொதுக்கப்பட்ட மெய்ம்மைகளின்
குவியம் மங்கிய முகங்களின் மீது
நிற்கிறது
நகல்களின் அரியணை
இரண்டு பிக்சல்
கூடுதலாக வீசியெறிந்து
நகல்களின் பிரதிகளை நிலைப்படுத்தலாம்
சில்வர் நைட்ரேட்டின்
புகைமூட்டத்தினிடையே எழும்
மெய்மைகளின் குரல் மீது
ஏறி இறங்குகிறது
மறதியின் நாளை.



நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 25-ஜூன்-2018

பற்கள்

யார் சாயலைக் கண்டாளோ
என்னைக் குவிந்து பார்த்திருந்தவள்
நான் தான்
நாற்றம் பிடித்த என் அறையின்
இருட்டு மூலை வரை
இழுத்து வந்துவிட்டேன்
அவள் உடலை.




எழுதிய நாள் : 10-மே-2018

குறி வெளிச்சம்

இந்த வாழ்க்கையில் எனக்குக்
குறை ஏதுமில்லை
கனவுகண்டு பிள்ளைபெற்று
சீரியலில் அழுது திரைப்படம் பார்த்து
புடைவை நகை சேர்த்து
முத்தம்வாங்கி முத்தமிட்டு
சமைத்துப்போட்டு சண்டையிட்டு
தோல் சுருங்கி நரைவிழுந்து
தள்ளாது போய்
எப்படியோ எங்காவது
ஒரு பெண்ணாக வாழ்ந்து
செத்துப்போகிறேன்.
ஆசிட் ஊற்றி
தெருவில் கழுத்தை அறுத்து
தீயுடலோடு அணைத்து
வாயில் உள்ளாடை திணித்து வன்புணர்ந்து
வெற்றுடம்பாய் வீசியெறிந்து
இருட்டுக் கோயிலுக்குள் புணர்ந்து கொன்று
புகைப்படச் செய்தியாக்கி
மெழுகுவர்த்தியேற்றி
உங்கள் குறி
உருவாக்கும் எந்த வெளிச்சமும்
தேவையில்லை எனக்கு.


எழுதிய நாள் : 2017ல் பெண்கள் வன்கொடுமை பற்றிப் புழுங்கிக்கொண்டிருந்த ஒரு நாள்

நிலத்தின் முதிய கண்கள்

நான் அங்கு போயிருந்தேன்
யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை
நான் அழைத்த பெயர்களுக்கு
யாரும் திரும்பிப் பார்க்கவில்லை
நாங்கள் வசித்த வீட்டில்
வேறு யாரோ இருந்தார்கள்
கனகாம்பரப் பூக்கள் உதிரும் தரை
சிமெண்ட் பூச்சால் சுத்தமாகியிருந்தது
வறட்டி ஒட்டிக் காயும் வேப்பமரங்கள் அங்கு இல்லை
கடைகளின் சாரைக்கடியில்
அந்த ஒத்தையடிப்பாதை புதைக்கப்பட்டிருக்கலாம்
நினைவுகள் வெளுத்துப்போன முதியவளின்
இடுங்கிய கண்களைக் கொண்டிருந்தது
அந்த நிலம்.
அடையாளங்கள் அற்ற அடையாளம் கொண்டிருந்த
ஏதோ ஓர் இடத்திலிருந்து
யாரோ ஒருவனாக வெளியேறிக்கொண்டிருக்கும்
என் மீது
ஏறி ஓடிக்கொண்டிருந்தது
அது.




எழுதிய நாள் : 09-ஏப்ரல்-2018

நாம்

என் மாளிகையில் ரகசியங்கள்
நிறைந்திருக்கின்றன.
அனைத்தும் நீங்கள் ஒப்படைத்துச் சென்றவை
என்னுடைய ரகசியங்கள்
மெல்ல நிறம் மாறி உங்களுடையதாகிக் கொண்டிருக்கின்றன.
உங்கள் ரகசியங்களும் என்னுடையவையும்
நிறங்களை மாற்றிக்கொண்டு
நமது ரகசியங்களாகிவிட்டன இப்போது.
நாம் எல்லோரும்
ஒரே நிறத்தவரானோம்.
வாருங்கள் கொண்டாடுவோம்
நம்மில் யாரும் கெட்டவரில்லை
நல்லவருமில்லை.



எழுதிய நாள் : 2017ல் எப்போதோ 😊

பிரிகை




வண்ணம் எங்கும் ஒன்றே.
சிவப்பென்றும் பழுப்பென்றும் ஓலமென்ன?!
கருப்பு துப்பிய எச்சத்தின் பிரிகைதானே
நான்
நீ
கடவுள்.


நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 29-ஜனவரி-2018

ஒரு வார்த்தை கவிதை

பாதி மட்டுமே எழுதப்பட்ட
கவிதை இருந்தது என்னிடம்
நெடுநாட்களாய்.
இவள் முத்தம்
அவள் வியர்வை
மரணம்
மாத்திரை
கொலை
கடிதம்
கொண்டாட்டம்
இத்தனையும் சேர்ந்து
வேறொரு புள்ளியில் நிறுத்தியிருக்கின்றன
கவிதையை இப்போது.
இன்னும் ஒரு வார்த்தைதான்
தேவையாயிருக்கிறது
கவிதை நிறைவதற்கு…





எழுதிய நாள் : 27-ஜனவரி-2018

பெருமீன்கள் உலரும் கரை

மெட்டி விரல்களை அலைகள் நனைக்க
கடல் பார்த்து நின்று கொண்டிருக்கிறாள்.
உதட்டில் படியும் உப்புக்காற்றில்
வேறொரு எச்சில் சுவையின் ரேகைகள்.
கண்களின் சுரப்பியை உறிஞ்சிய
மேகம் கருஞ்சூலியான பொழுதில்
ஒரே நிறம்
ஒரே மொழி
ஒரே சுவை
கடல் அவள் வானம்.
நிலவின் செதில்களைப் புடைக்கும் அலையில்
காட்சிப்பிழையாய் தூரப் படகொளி.
பெருமீன்கள் உலரும் கரையில்
வெற்றுத்தூணாய் நிற்கிறாள்
திசையின் தீயை அணைத்து.


எழுதிய நாள் : 24-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல் 2018 இதழில் பிரசுரமானது

தொலைந்த நாள்

அந்த நாள்தான் எங்கோ தொலைந்துவிட்டது
அதனோடு அந்த முதல் வார்த்தையும்.
அவளிடம் அந்த நாள் பத்திரமாக இருக்கிறதென்றாள்.
ஆனால்
எனக்கும் அவளுக்கும் அந்த நாள் வேறுவேறாயிருந்தது.

கடந்தவைகளின் மாயப் புதிரறையில்
உள்ளிழுத்த வாசல்தேடி
ஒவ்வொரு நாளாய்த் திறந்து பார்க்கிறேன்.

காலத்தின் நிழற் சிதிலங்களுக்குள்
அலைந்தலைந்து 
வேறு நாட்களின் கண்ணிகளில் சிக்கிக்கொள்கிறேன்.

இரைபிடிக்கும் பல்லியின் நாக்கு
குவியும் கணத்திற்கு முந்தைய கணத்தில்
உருமாறிப் பறக்கிறது அந்த நாள்.

எப்படியாவது அந்தநாளைப் பிடித்து
அவளைப் பார்த்த முதல்பொழுதைச் 
சிறிது கலைத்துவிட்டால் போதும்.
இந்த வார்த்தைகளையும் சேர்த்து
ஆணிகள் பதியாச் சுவராயிருக்கும்
நிகழ்கணம்.


[புதிரறை=Maze]

எழுதிய நாள் : 22-ஜனவரி-2018

புகைப்படத்தில் ஊரும் எறும்புகள்

இடுப்பு வரை தெரியும்
உன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நம் கட்டில் பொழுதின் எறும்புகள்
படத்தின் மீது ஊர்கின்றன
காமத்தின் காய்ந்த பாகினைக் கால்களில் சுமந்தபடி.
படத்தின் மேலடுக்கிலிருந்து வெளியேறும்
உன் வியர்வையின் படலத்துள்
அமிழ்ந்து போகிறது இந்த நொடி.
நடுங்கும் அனலோடு
உன்னுதட்டு வாசத்தைப் பறித்துக்
கோர்க்கின்றன என் விரல்கள்.
கண்களுக்குள் ஒளிரும்
வெட்கப்பரல்களைத் தொடும் பொழுதில்
உயரம் குறைந்து ஒளிப்புள்ளியின்
ஒற்றையருவியாகிறேன்.
வேரகழ்ந்த மரத்தின் விழுதுகளில்
அறுந்த கண்ணிகள்
நட்சத்திரச் சங்கிலியாய்த் துளிர்க்கின்றன.


எழுதிய நாள் : 19-ஜனவரி-2018

அகழிக்குள் முளைக்கும் ஆப்பிள் மரங்கள்

தன் வாலைக் கடிக்க முனையும்
நாயைப் போலவே
உன்னைத் தொட்டுவிடும் என் முயற்சி

சிலந்தியின் ஒற்றையிழையால் பிணைத்திருக்கிறாய்
என்னை
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்

நமக்கிடையே நீ
உருவாக்கிய அகழிக்குள்
முளைத்துக்கிடக்கின்றன
ஆப்பிள் மரங்கள்

கால்கள் பிணைக்கப்பட்ட கன்றினைப்போல்
உன் நிலத்தில்
இரண்டுகால் சுதந்திரத்தோடு
என்னை உலவவிட்டிருக்கிறாய்

எனக்குள் பூகம்பம்
நிகழும் நுண்நொடிக்குமுன்
குறுஞ்செய்தி சில நிமிடப்பேச்சு
ஏதோ ஒன்றினால்
என்னைச் சீர் செய்துவிடுகிறாய்
கவிதை, கண்ணீரின்றிக் காய்ந்துகிடக்கிறது
என் நாட்குறிப்பு

புற்களின் காட்டுக்குள்
சிற்றெறும்பென ஊரித்திரியும்
என் இதயத்துடிப்பை இறக்கவிடாது
குளிரறைக்குள் வைத்திருக்கிறாய்

கதவுகளற்ற சிறைச் சுவர்கள்
புலன்களைத் தொடவிடாது
என் கால்சங்கிலிகளுடன் திரிகிறேன்
உன் பெருங்கொடையான
சீசாச் சமுத்திரத்திரத்துள்.




எழுதிய நாள் : 11-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல்-2018 மாத இதழில் வெளியானது.