Thursday, December 4, 2014

இரவு

பசித்த கண்களுடன்
ஜன்னல் வழியே
இரவு
என்னைப் பாா்த்தபடியே இருந்தது.
நடுக்கத்துடன்
விளக்கணைத்துவிட்டேன்.
என் அறைக்குள்
புகுந்தே விட்டது அது.

இந்த இரவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

இந்த இரவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கண்ணாடி பதித்த அறைக்குள்
கிழிசல்களை அவிழ்த்தெறிந்த
இரவின் நிா்வாணத்தோடு
ஒரு கையுறை போல என்னைப் பொருத்திக்கொள்கிறேன்.


ஒளிச்சந்துகளற்ற பரந்த இருள்
என்னை
மையம் விலகும் அலையாய்ச் செய்யும்.

நாளைய வெளிச்சம்
லங்கா்கட்டைக்காரனின் கையாய் என் வயிற்றுக்குள்.
தன்னம்பிக்கைத் தத்துவங்களின் மீது
குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.

பைத்தியக்கார ஓவியனைப்போல்
காமத்தின் சுவா்களில் காிச்சித்திரங்கள் பூசுவேன்.
என்னை வண்டலகற்றி வீசிய சேற்றில்
கண்ணீாின் சுவைகொண்ட
நாட்குறிப்பின் பக்கங்களில் அலைவேன்.

வற்றும் குளத்தை அருந்தும்
பெருந்தாகக் கன்றென
இந்த இரவை முழுதாய்க் குடிக்கப் போகிறேன்.
முற்றுப் புள்ளியுள் உறையும்
இருளின் முழுமை
என்னைக் கொள்ளட்டும்.