Tuesday, October 29, 2013

எனக்கான நாற்காலி

காற்று
அமர்ந்திருக்கிறது
என் நாற்காலியில்.
திண்ணையில்
காத்திருக்கிறேன்
நான்;
காற்று விட்டுச் செல்வதற்காக.

Friday, October 25, 2013

அவள் கனா

முன்னிருக்கையில்
உறக்கத்திலிருந்தவள்
சரத்தினின்றுதிர்ந்த
ஒற்றை மல்லிகை
பரப்பியது
என் மடியில்
அவள் கனவை.

ஈசல் வார்த்தைகள்

காகிதத்தின்
வெண்பரப்புக்கும்
பேனாவின்
கூர் முனைக்குமான
நுண்வெளியில்
கரைகின்றன
எழுத நினைத்த
கவிதைகள்.

மனைத்தடம்

அவிழ்ந்த வேட்டியை
ஒரு கையில் இறுக்கி
போதையில்
வீதி கிறுக்கிய
கால்களை
சரியாய் மனை சேர்த்திருக்கும்
மறு கையில் சுமந்திருநத
சில
புரோட்டாக்களும்
பிஸ்கெட் பாக்கெட்டும்

திசைகள்

இருபத்துச் சொச்சம்பேர்
பயணிக்கும் பேருந்தில்
இருபத்துச் சொச்சம்
திசைகள்

தயவு

அடுத்த முறை
சந்திக்கும் போது
உன் கண்களைக்
கொஞ்சம் அதட்டி வை.
நிறைய பேச வேண்டும்
உன்னோடு.

தேவதைகளின் புத்தகங்கள்

கடை விரித்திருந்தாள்
புத்தகங்கள் நடுவே
பூங்காவாய்
பவானி.

அட்டைப் படங்களே
புத்தகப் பெயர்களாயின.
'ஸ்னேக் புக்'
'சாமி புக்'
'ஆப்பிள் புக்'
'சாம்பார் புக்'
'ஏஞ்சல் புக்'
என
புத்தகப் பெயர்களும்,

'ரெண்டு ரூபா'
'டென் ருப்பீஸ்'
'ஃபோர் ருப்பீஸ்'
என
விலைப் பட்டியலும்
இருந்ததை விட
ஈர்ப்பதாகவே
இருந்தன.

நான் கொடுத்த
நூறு ரூபாய்க்கு
டென் ருப்பீஸ்
ஏஞ்சல் புக்
எடுத்துத் தந்தாள்
தேவதை.

வெறும் கையை
நீட்டினாள்
மீதிச் சில்லறையென.

அவள் கையளித்த
காற்று உதிர்த்தது
என் நாட்களோடு
கோர்த்துக் கொள்ளவென
சில
நட்சத்திரக் கண்ணிகளை.
முன்னிருக்கையில்
அவன் விரல் கோர்த்து
மெளனமாய்
அமர்ந்து வந்தவளின்
நெற்றிக் கூந்தல்,
காற்றில்
தீட்டிக் கொண்டிருந்தது
வெட்கக் கவிதைகளை.
எனக்கான வெளியைக்
கண்டடையாமல்
கூடு
கூடாய்த் திரிகிறேன்
நான்.
ரீங்கரிக்கும் வார்த்தை,
உயிர்சுடும்  தீண்டல்,
நம்மைச் சுமக்கும்
கடிகாரம்
எதுவும் வேண்டாம்.
விழித்தூரிகையால்
என் நிமிடங்களை
வண்ணப்படுத்து போதும்
சில
கவிதைகள்
கிடைக்குமெனக்கு