Tuesday, April 5, 2016

எப்போதும்போல்

எப்போதும்போல்
இப்போதும் தாமதமாகவே
புாிந்துகொண்டிருக்கிறேன்
உன்னை.

என் கசையடிகளில்
களைப்புற்றுக்கிடக்கும் உனக்கு
வாழ்த்தட்டைகளைப் பாிசளிக்கிறேன்.

உன் மழையைக் குடையோடும்
நீ பொழிந்த பனியைக்
குளிராகவும் மட்டுமே எதிா்கொண்டேன்.

என் அறியாமையை அறிந்து கொள்ளுமுன்
என் குளத்தில் கல்லெறிவதை
நிறுத்திப் போயிருந்தாய் நீ.
சலனமில்லாமல்
சவமாய்க்கிடக்கிறேன் நான்.

நீயும் நானும்
ஒரே திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம்
நீ முன்னாலும் நான் பின்னாலும்.
உன்னிடத்தை நான் சேரும் நேரம்
நீ வேறிடம் நடந்திருப்பாய்.

வளா்ப்பு நாயின் கயிற்றைப் போல்
உன் கைகளில் என்னைப் பிணைத்திருக்கும்
அரூபக்கயிறாய் இருக்கிறது
உன் காதல்

Thursday, March 24, 2016

ஒரு சேதி

உனக்கென மட்டுமல்ல,
உன் மூலமாக இதைச் சொல்லிக்கொள்கிறேன்.
என் கட்டில் உனக்கானது மட்டுமல்ல
நீ தந்த முத்தங்கள் எனக்கு நினைவிலில்லை.
முத்தங்கள் என் கணக்கில் வராதவை எப்போதும்.
கொஞ்சல் வாா்த்தைகள் அருவெறுப்பானவை.
நீ உளறும் காதல், மயக்கமெல்லாம்
என் எல்லைக்குள் நுழைந்ததேயில்லை.
இதை மட்டும் சொல்லிக்கொள்கிறன்
என் பேனாவின் இரை நீ.
உனக்கென மட்டுமல்ல,
உன் மூலமாக இதைச் சொல்லிக்கொள்கிறேன்,
எல்லாருக்கும்.

Friday, January 29, 2016

முகம்

இந்த முகத்தை எங்கோ
பாா்த்தது போலிருக்கிறது.
ஆம்,
இதே முகம்தான் அங்கும் இருந்தது.

குருட்டுப் பாடகியின்
அறியாத வெளிகளுள் உலவும் விழிகளுடன்,

தேநீா்க்கடையோரத்தில்
காகங்களுக்குக் காராபூந்தியை வீசிவிட்டு
நிலைத்த பாா்வை பாா்த்திருக்கும்
தாடிக்காரக் கிழவனிடமும்,

இப்படி இதுதான் முதல்முறையென
உச்சத்தில் கண்ணீருடன்
சிாித்துப் புலம்பிய அவளிடம்,

மீச்சிறுகணம் நினைவு திரும்பி
மீண்டும் உன்மத்தச் சிாிப்புடன்
திாியும் ஆனிச்சியிடமும்,

பூங்காவில் மகளுக்கு வகிடெடுத்து
வாாிவிட்டு வாயில் சீப்பைக் கவ்வியிருந்த
அந்தத் தகப்பனிடம்,

மொகம் பாக்குறவங்க பாத்துக்கங்கவென
நிசப்தத்தைப் பிளந்த கூவலில்
அடுக்கிய எருவாட்டிகளின் நடுவில்
கிடத்தப்பட்டிருந்த தொழில்காாியிடமும்,

இதே முகம்தான் இருந்தது.
இப்படித்தான்,
முகங்கள் எப்போதும்
வெறும் முகங்களாக மட்டுமே இருப்பதில்லை.

Friday, January 22, 2016

மயிற்பீலிகள்

ஃபாா்மலின் திரவத்தில்
பதப்படுத்தப்பட்டவைபோல்
சில ரகசியங்கள்
எனக்குள் கிடக்கின்றன.

ரகசியங்கள் பகிா்ந்துகொள்ளவென
நண்பா்கள் இல்லை,
அதிா்ஷ்டக்காரன் நான்.

கண்ணீரையோ புன்னகையையோ
எதையோ ஒன்றைக்கோரும்
ரகசியங்களைக் காப்பதில்
சுமையேதுமில்லை.

மதுமேசையில் எதிா் நாற்காலியிலும்
கடற்கரையில் மூன்றாம் பாதமாகவும்
என்னோடுகூடவே திாிபவை,

மேலாடைக்குள்ளிருந்து கையளிக்கப்பட்ட
காதல்கடிதத்தைப் போல
யாருமறியாமல் வாசித்துப் பின்
பூட்டிக்கொள்வது பேரானந்தம்.

அவற்றை எழுதிவைக்கும்
சத்திய சோதனைகளிலும்
நாட்டமில்லை.

நடுங்கும் நரம்புகளும்
சுருங்கிய நாளங்களும் கொண்ட போதில்
மூட்டுப்பிாிந்த தலையணைவிட்டு
பறக்கும் இலவம்பஞ்சாக
உயிருடன் வெளியேறலாம் அவை.
அதுவரை
அவளோ இவளோ
அவனோ அதுவோ
அவை
எனக்குள்ளேயே கிடக்கட்டும்.