Tuesday, June 1, 2010

என்னைக் கொன்றவன்

சிதைந்து கிடந்த என் மீது
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தேன்.
சுற்றிலும் கிடந்தன
நாக்குகள் உதிர்ந்த என் நாட்கள்,
விசாரணைச் சாட்சிகளாய்.

அவன், இவன்,
அவள், இவள்,
மனை, அலுவல்,
பகல், இரவு....
வேறு வேறு வில்லைகளில்
வேறு வேறு நிறங்களில்
இருந்ததாம் என் மொழியின் நீட்சி.

சூழ்ந்த வில்லைகள்
வளையமாய் நெருக்கிய
ஒரு பொழுதில்
என்னைக்காட்டும்
மொழியற்றுப்போன பித்தில்
என்னை நானே
கொன்று போட்டதாய்
முடிவுற்றது விசாரணை
சாட்சிகளின் ஆதாரத்துடன்.

Monday, May 17, 2010

கழி காலம்

தொள்ளாயிரம் ரூபாய்
புதுச்சட்டை;
சாயம் போகுமா,
போகாதா?

அலுவலகக் காப்போனின்
விஸ்தீரணப் புன்னகை;
பிரதி தின வெளிப்பாடா,
கைமாற்றுக்
கோரிக்கையின் அச்சாரமா?

முதல் முறை தின்ற
உணவகத்தில்,
பரிமாறப்பட்டது கோழிதானா,
வேறேதாவதா?

பல நேரங்களில்
செல் பேசித்திரியும் மகள்;
பள்ளித் தோழியா,
பருவக் கோளாறா?

சிறிதும் பெரிதுமாய்
கடிகார முட்களாய்
மனமரிக்கும் கேள்விகளைச்
செரித்துப் பின் தள்ளும்
நொடி முள்ளமர்ந்து
தினம் நகர்கிறது
பேரண்டத்தின்
சிறு துகள் பயணம்.

Thursday, April 29, 2010

பசி

நெடுஞ்சாலையில்
பச்சை விளக்குகள்,
பசி போக்க;
சிவப்பு விளக்குகளும்!

Tuesday, April 27, 2010

விலகாவரம்

தனியே இரயில் பயணம்;
மேலடுக்குப் படுக்கையில்
காற்றுக்குமிழிகளுடன்
பக்கத்தில் படுத்திருந்தது
அவள் நிரப்பித் தந்த
போத்தல் நீர்.

திரை

எதிரடுக்கில்
மல்லிகை மணத்துடன்
படுத்திருந்தவளின
விலகிய போர்வை காட்டியது
மெட்டி விரல்கள்.

இரயில் (சக)வாசம்

இரயில் பயணங்களில் கண்ணில் விழுந்த காட்சிகளைக் கோர்த்ததில் விளைந்த வார்த்தைகள் இங்கே இரயில் (சக)வாசத்தில்...

Monday, March 29, 2010

தேடுதிசை

கடந்து போகையில்
Will You Cross the Skies For Me / Vinnaithaandi Varuvaaya (New Rahman Tamil CD)தினம் ஒருத்தி
உன் நினைவூட்டுகிறாள்.
நெளி கூந்தல்,
புடவை மடிப்பு,
கீழுதட்டு ஈர வரி,
விரல் பிடித்த மருதாணி,
இப்படிப் பல...
உளத்தடித் தீயைUltimate Love Songs Collection - Always Yours { Time Life } { Various Artists }
ஊதிப் பெரிதாக்கி
புகையற்ற காற்றாய்
கடந்து போகிறாள்
ஓர் நாள் இவள்;
மற்றோர் நாள் அவளும்.
எல்லோரும் உன் போலே,
என்றாலும்
யாரும் நீ இல்லை.
திசை மறந்த
கைகாட்டி மரமாய்
கணக்கின்றி சுழல்கின்றன
காற்றில்
என் விழிகள்!

Tuesday, March 23, 2010

நெடும்பயணம்

Perya Puranam: A Tamil Classic on the Great Saiva Saints of South India (English Translation)இருக்கையின்
இரு ஓரங்களில்
அவளும் அவனும்;
இருவரிடையோடும்
விழிகள் தொடாத
பார்வைகளையும்,
மரித்த நாக்குகளின்
மெளனத்தையும்
காற்றில்
கரைக்கின்றன
இருவர்க்கிடையில்
கிடத்திய
புத்தகத்தின் தாள்கள்

Friday, March 5, 2010

மதிப்புரை

"நான் என்ன செய்ய?"
"ஆபீஸுக்கு நேரமாயிடுச்சு",
"யாராவது பாத்துக்குவாங்க",
"அதோட விதி",
"சரியா பாக்கலீங்க",
வேறு வேறு வாக்கியங்களில்
ஒளிந்து கொண்டு
சாலையில்
உயிர் துடித்தடங்கும்
நாய்க்கு
ஏதும் செய்யாமல்
கடந்து சென்ற
அயோக்கியர்களில்
நானும் ஒருவன்.

Sunday, January 31, 2010

பார்வை மோகம்

அவளை
இறுக்கிய மேல்சட்டை,
அவனை
இறுக்கிய இளமை,
இடையில் கருகும்
பார்த்துப் பரிதவிக்கும்
என் மூச்சு.

தீராத் தாகம்

பேருந்தின் எதிர்த்திசைச்
சாலையில்
புள்ளியாய்த் தொலையும்
பேனாவின்
முறியா முனை
கொட்டிக் கொண்டிருக்கிறது
கவிதையின்
மீதி வார்த்தைகளை!