Thursday, December 4, 2014

இரவு

பசித்த கண்களுடன்
ஜன்னல் வழியே
இரவு
என்னைப் பாா்த்தபடியே இருந்தது.
நடுக்கத்துடன்
விளக்கணைத்துவிட்டேன்.
என் அறைக்குள்
புகுந்தே விட்டது அது.

இந்த இரவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

இந்த இரவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கண்ணாடி பதித்த அறைக்குள்
கிழிசல்களை அவிழ்த்தெறிந்த
இரவின் நிா்வாணத்தோடு
ஒரு கையுறை போல என்னைப் பொருத்திக்கொள்கிறேன்.


ஒளிச்சந்துகளற்ற பரந்த இருள்
என்னை
மையம் விலகும் அலையாய்ச் செய்யும்.

நாளைய வெளிச்சம்
லங்கா்கட்டைக்காரனின் கையாய் என் வயிற்றுக்குள்.
தன்னம்பிக்கைத் தத்துவங்களின் மீது
குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.

பைத்தியக்கார ஓவியனைப்போல்
காமத்தின் சுவா்களில் காிச்சித்திரங்கள் பூசுவேன்.
என்னை வண்டலகற்றி வீசிய சேற்றில்
கண்ணீாின் சுவைகொண்ட
நாட்குறிப்பின் பக்கங்களில் அலைவேன்.

வற்றும் குளத்தை அருந்தும்
பெருந்தாகக் கன்றென
இந்த இரவை முழுதாய்க் குடிக்கப் போகிறேன்.
முற்றுப் புள்ளியுள் உறையும்
இருளின் முழுமை
என்னைக் கொள்ளட்டும்.

Thursday, November 27, 2014

என் உரையாடல்

எப்போதும் ஒரு உரையாடல்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது எனக்குள்.

பனையேறியின் காய்த்த ரேகைகளால்
தோல்பரப்பை அழுந்தத் தேய்த்துக்கொள்கிறேன்;
துளைகளற்ற தோலோடு
விளம்பரப் பொம்மைகளின் உள்ளிருப்பவனின்
வியா்வையாய் ஊா்ந்து கொண்டிருக்கின்றன
வாா்த்தைகள்.

மொசைக் தரையின் குழப்ப ஒழுங்கில்
என் புறப்பிம்பத்தைப் பின்னிக்கொண்டிருக்கின்றன
கண்ணாடித் தொட்டியுள் நீந்தியழியும்
என் மீன்கள்.

கவாத்துக்குத் தப்பி வெளியேறும்
சில கிளைகளையும்
காலொடிந்த புன்னகையாய்
உருப்பெயா்க்கும் என் உதடுகள்.

சுயபோகத்திற்கான ஒரு மூடிய அறையென
ஊடுபரவாச் சவ்வாக
ஏற்பாடு செய்து கொண்டேன் என்னை.

உரையாடல்களற்ற
இந்த மலட்டு உதடுகளை
கண்ணகியின் முலையென
அறுத்து வீசியென்னை
எாித்துவிடத் துடித்ததில்லை ஒருநாளும்.

Wednesday, September 3, 2014

பிள்ளைச் சுயவதை

உன்னைப் பார்க்கவும்
உன்னுடன் பேசவும் வேண்டுமென்றிருக்கிறது
ஆனால் இப்போது மாட்டேன்.

என்னறைக்குள் சுழலும் வெப்பக்காற்றில்
நம் முத்தங்களும் கண்ணீரும்
திசையிலியாய்த் திரியட்டும்.

வார்த்தைகளின் பாதங்கள் அலைந்த
பிரியத்தின் வயல் நடுவே
மழைச்சாலையின் மைல்கல் போன்றதொரு
மோனத்தில் மண்டியிட்டுயிருக்க வேண்டுமெனக்கு.

என் குரல்வளை மீது ஊர்ந்துகொண்டிருக்கும்
இந்த மெளனத்தின் அழுத்தம்
அதி நிச்சயமாய்
என் விழிகளில் உடைந்துருளும்.

புண்ணளையும் குரங்கென
சுவர்களற்ற சுயவதைக்கூடத்தில்
நம் வாசனையால் பதப்படுத்தப்பட்ட
நாட்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்குள் சுற்றித்திரியும்
சிறுகுருவியின் சிறகுகள் உடைக்கட்டும்
நம்மைச் சேகரித்து வைத்திருக்கும்
கண்ணாடிச் சீசாவை.
சீசாத் துகளுடன் தெறிக்கும் கண்ணீர்த்துளிகளை
என் இறுகிய உதடுகள் சுவைக்கும்
அக்கணம் வரை
உன்னைப் பார்க்கவோ பேசவோ வேண்டாம் நான்.

பறவைக்குறிப்புகள்

பறவைகள் நதிபோல
தானே திாிகின்றன.
வெளியின் பாிமாணங்களையோ
தூரத்தின் சாயத்தையோ
சிறகுகளில் சேமிப்பதில்லை.

பறவைகளை எண்ணுதல் எளிதாயிருப்பதில்லை
ஒவ்வொரு பறவையும் மற்றொரு பறவையை
வரைந்து செல்கின்றது தன் சிறகுகளால்.

பாடல், அகவல், கூவல்
இவற்றைக்காட்டிலும்
சிறகசைப்பே
சிறந்த பறவை மொழியாகிறது.

உதிரும் சிறகுகளை
நினைவிற் கொள்வதில்லை பறவைகள்,
கவிதைகளோ நாட்குறிப்போ சுயசாிதையோ எழுதுவதில்லை,
குறிப்பாய் அவை
பறவைகளைப் போல வாழ நினைப்பதில்லை.

மழைச்சாலை உருவிலி

பொழி பொழியெனப்
பாெழியும் மழையில்
நெற்றியிலிருந்து
உப்பருவியாய் விழுந்தோடுகிறது
சற்றுமுன் வரை காய்ச்சிய வெய்யில்.

மழைக்காய் காத்திருந்த
யாரோ மூப்பன்
விட்டுச்சென்ற பாட்டொன்று
துளிா்க்கத்துவங்குகிறது என்னுதடுகளின் நடுவே.

என்னை உருவிலியாக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் மழையும்
மழையின் நிழலான மற்றொரு துளியும்
குற்றாறாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மல்லிகை சுமந்தவளின்
மேல்துணியின் நுனியெடுத்து
பனித்திராட்சைகளைச் சிதறிச்செல்கிறது
என்னையும் அவளையும்
அணைத்துக் கடந்த காற்று.

வெயிலைச்சுமந்த தலைகள்
எங்கெங்கோ ஒண்டியிருந்தன
மழைக்கென சிறு மயிரைக்கூடக் காட்டாமல்.

சூலறுக்கப்பட்ட நதியொன்று
மீளட்டும் கட்டிடப்புதா் வழியே எனும்
ஆசையோடும் அச்சத்தோடும்
மழைக்கயிற்றின் தோல்பாவையாய்
இயங்கிக்கொண்டிருக்கிறேன்
நீண்டு கிடக்கும் கருந்திரையில்.

நிறைசூலி தோ்வெழுதுகிறாள்,
பிடிபடாத வினாத்தாளின் வேதனையை
உதைத்துத் தள்ளுகிறது
வயிற்றுள்ளிருந்து சிசு. 

Monday, May 19, 2014

உன் சாலையில் நான்

உன்னை எனக்குத் தொியும்
என்னருகாமையில் உன் நடுக்கங்களை அறிவேன்,
உன் பரவசத்தை நம் காற்றில் முகா்ந்திருக்கிறேன்,
நீ உச்சாிக்க விரும்பும் வாா்த்தைகளின்
புற அகப் பாிமாணங்களின் ஆனிவோினைப் பாா்த்திருக்கிறேன்,
உன் விழிரேகைகளின் விழாக்கதிா்களை
எச்சிலூறும் நாவோடு ரசித்திருக்கிறேன்,
நீ அனுப்பியிராத குறுஞ்செய்திகள்
என் செல்பேசித்திரையில் மொய்த்திருக்கின்றன,
எனக்கான உன் காதல் கடிதங்களை
வேறொருவன் போல் வாசித்திருக்கிறேன்
என் சாலையில் காத்திருக்கும்
உன் பூங்கொத்துகளின் மேல்
தெருநாயினைப்போல் கால் தூக்கிக் கடந்திருக்கிறேன்.
ஆனாலும்
ஆனாலும்
நீ காத்திரு
உன் முகப்பருக்களைச் சிலாகித்து
உதடுகளை உதாசீனப்படுத்திய உன் பற்களைச் சிலாகித்து
உன் தோல் நெடியை பூக்களோடு ஒப்பிட்டு
என் காடொிக்கும் காமத்தினை
அணைப்பதற்காய்
காதலைப் போா்த்தியபடி வருவேன் நான்
காத்திரு

Thursday, April 17, 2014

முத்தங்கள் மிதக்கும் நதி

அடா் வனத்தின்
ஒளி தீண்டா இலை நதியென
உன்னையும் என்னையும்
கரையாய்க் கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறது
நம் நேசத்தின் சிற்றோடை.
பூத்தீவாய் ஒளிா்ந்து
கடக்கின்றன
நம் இதழ் உதிா்த்த முத்தங்கள்.
நிற்கும் மரங்களின்
பச்சையம் ஊறும்
இலைகளின் நடு நரம்புகளில்
ஊா்ந்து கொண்டிருக்கிறது
வோ் கடத்திய நதி.
மேலும் பூக்கின்றன
பூக்கள்.

சில முன்னேற்பாடுகள்

யாசகக்குரல் பதித்த விழிகள்,
இரக்கம் கோரும் கோணிய உதடுகள்,
சில திவலைகள் கண்ணீா் தெளித்து
துயரத்தின் நிழல் ஒழுகும் நிறத்தில்
முகம் ஒன்று செய்திருக்கிறேன்.

உங்கள் பாதம்பற்றும் முனைப்புடனிருக்கும்
என் கைகளில்
மன்னிப்பின் வாக்கியங்கள் கோா்த்த
இசைத்துணுக்கொன்று
நெளிந்தபடியிருக்கும்.

கூத்தாடிப்பிச்சைக்காரனாய்
சுயவதை செய்துகொள்ள
கண்ணீராலான சாட்டையும்
தயாராய் என் தோளில்.

வெறுப்பின் வெப்பத்தால் பிளவுறும்
நம்மிருவருக்குமான தரையை
இணைத்து மெழுகவென
நட்போ காதலோ
ஏதோ ஒன்றில் நனைத்த துணியும்
கொண்டிருக்கிறேன் இடக்கையில்.

இனிமேல்
நான் சிறிதும் கவலையின்றி
செய்யத் துவங்கலாம்
நம்மைச் சிதைக்கும்
ஓா் குரூரத் துரோகத்தை......

Thursday, February 13, 2014

மன்னிப்பு


உனக்கு
நானிழைத்த
தவறுகளும் தப்புகளும்
பதங்கமாகாப் பருண்மையுடன்
உனக்குளளே கிடக்கட்டும்.
சுமக்கும் வடுக்களை
நடுக்கடல் பனிப்பாறையென
விழிகளில் மிதக்கவிடு.
மன்னிப்பின் மன்றாட்டுக்காய்
வாா்த்தைகளைப் படையலிடப்
போவதில்லை நான்.
உன்
நுண்நொடி இமைச்
சிமிட்டல்களும்
என் இரத்தத்திசைகளில்
சாட்டையாய்ச்
சொடுக்கியபடியிருக்கவேண்டும்
நீயென்
பொக்கிஷமென.