Thursday, April 17, 2014

முத்தங்கள் மிதக்கும் நதி

அடா் வனத்தின்
ஒளி தீண்டா இலை நதியென
உன்னையும் என்னையும்
கரையாய்க் கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறது
நம் நேசத்தின் சிற்றோடை.
பூத்தீவாய் ஒளிா்ந்து
கடக்கின்றன
நம் இதழ் உதிா்த்த முத்தங்கள்.
நிற்கும் மரங்களின்
பச்சையம் ஊறும்
இலைகளின் நடு நரம்புகளில்
ஊா்ந்து கொண்டிருக்கிறது
வோ் கடத்திய நதி.
மேலும் பூக்கின்றன
பூக்கள்.

சில முன்னேற்பாடுகள்

யாசகக்குரல் பதித்த விழிகள்,
இரக்கம் கோரும் கோணிய உதடுகள்,
சில திவலைகள் கண்ணீா் தெளித்து
துயரத்தின் நிழல் ஒழுகும் நிறத்தில்
முகம் ஒன்று செய்திருக்கிறேன்.

உங்கள் பாதம்பற்றும் முனைப்புடனிருக்கும்
என் கைகளில்
மன்னிப்பின் வாக்கியங்கள் கோா்த்த
இசைத்துணுக்கொன்று
நெளிந்தபடியிருக்கும்.

கூத்தாடிப்பிச்சைக்காரனாய்
சுயவதை செய்துகொள்ள
கண்ணீராலான சாட்டையும்
தயாராய் என் தோளில்.

வெறுப்பின் வெப்பத்தால் பிளவுறும்
நம்மிருவருக்குமான தரையை
இணைத்து மெழுகவென
நட்போ காதலோ
ஏதோ ஒன்றில் நனைத்த துணியும்
கொண்டிருக்கிறேன் இடக்கையில்.

இனிமேல்
நான் சிறிதும் கவலையின்றி
செய்யத் துவங்கலாம்
நம்மைச் சிதைக்கும்
ஓா் குரூரத் துரோகத்தை......