Wednesday, September 3, 2014

பிள்ளைச் சுயவதை

உன்னைப் பார்க்கவும்
உன்னுடன் பேசவும் வேண்டுமென்றிருக்கிறது
ஆனால் இப்போது மாட்டேன்.

என்னறைக்குள் சுழலும் வெப்பக்காற்றில்
நம் முத்தங்களும் கண்ணீரும்
திசையிலியாய்த் திரியட்டும்.

வார்த்தைகளின் பாதங்கள் அலைந்த
பிரியத்தின் வயல் நடுவே
மழைச்சாலையின் மைல்கல் போன்றதொரு
மோனத்தில் மண்டியிட்டுயிருக்க வேண்டுமெனக்கு.

என் குரல்வளை மீது ஊர்ந்துகொண்டிருக்கும்
இந்த மெளனத்தின் அழுத்தம்
அதி நிச்சயமாய்
என் விழிகளில் உடைந்துருளும்.

புண்ணளையும் குரங்கென
சுவர்களற்ற சுயவதைக்கூடத்தில்
நம் வாசனையால் பதப்படுத்தப்பட்ட
நாட்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்குள் சுற்றித்திரியும்
சிறுகுருவியின் சிறகுகள் உடைக்கட்டும்
நம்மைச் சேகரித்து வைத்திருக்கும்
கண்ணாடிச் சீசாவை.
சீசாத் துகளுடன் தெறிக்கும் கண்ணீர்த்துளிகளை
என் இறுகிய உதடுகள் சுவைக்கும்
அக்கணம் வரை
உன்னைப் பார்க்கவோ பேசவோ வேண்டாம் நான்.

No comments:

Post a Comment