Wednesday, September 3, 2014

மழைச்சாலை உருவிலி

பொழி பொழியெனப்
பாெழியும் மழையில்
நெற்றியிலிருந்து
உப்பருவியாய் விழுந்தோடுகிறது
சற்றுமுன் வரை காய்ச்சிய வெய்யில்.

மழைக்காய் காத்திருந்த
யாரோ மூப்பன்
விட்டுச்சென்ற பாட்டொன்று
துளிா்க்கத்துவங்குகிறது என்னுதடுகளின் நடுவே.

என்னை உருவிலியாக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் மழையும்
மழையின் நிழலான மற்றொரு துளியும்
குற்றாறாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மல்லிகை சுமந்தவளின்
மேல்துணியின் நுனியெடுத்து
பனித்திராட்சைகளைச் சிதறிச்செல்கிறது
என்னையும் அவளையும்
அணைத்துக் கடந்த காற்று.

வெயிலைச்சுமந்த தலைகள்
எங்கெங்கோ ஒண்டியிருந்தன
மழைக்கென சிறு மயிரைக்கூடக் காட்டாமல்.

சூலறுக்கப்பட்ட நதியொன்று
மீளட்டும் கட்டிடப்புதா் வழியே எனும்
ஆசையோடும் அச்சத்தோடும்
மழைக்கயிற்றின் தோல்பாவையாய்
இயங்கிக்கொண்டிருக்கிறேன்
நீண்டு கிடக்கும் கருந்திரையில்.

No comments:

Post a Comment