Friday, February 20, 2009

உதிராத நினைவுகள்


ஐந்து வயது நிலவாக‌
அம்மா அன்புக்கெதிரே
நடத்திய‌
உணவு மறுப்புப் போராட்டமும்,
அதன் பாசத்தோல்வியும்…

மேகலாவின் கரம் இணைத்து
பனிக்குளித்த மொட்டுக்களாய்
ஆடிய சேற்றுக்குளியலும்,
கிச்சுக் கிச்சுத் தாம்பூல‌மும்…

வீட்டுப்பாட‌ நேர‌த்தை
தொலைக்காட்சியில் தொலைத்து
க‌ண‌க்கு வாத்தியார் முன்
கொலைப்ப‌சுவாய் நின்ற‌தும்,
அவ‌ரின் ச‌த்த‌மான‌
பிர‌ம்பு முத்த‌ங்க‌ளும்…

ர‌ஜினி, க‌ம‌ல் திரையில் காத‌லிக்க‌
கதாநாய‌க‌ன் வேட‌மிட்டு
க‌டித‌த்தை எதிர் வீட்டு
ஜ‌ன்ன‌லிட‌ம் நீட்டிய‌தும்,
அதை அவ‌ள் அண்ண‌னிட‌ம் காட்டிய‌தும்…

ப‌ள்ளி வேளையில்
தியேட்டர் கியூவில் ம‌ல்லுக்க‌ட்டி
விய‌ர்வைக் குளிய‌லில்
பார்த்த‌ ப‌ட‌ங்க‌ளும்,
வ‌ருட‌க்க‌டைசியில் அணை‌த்த‌
பரீட்சைக் காய்ச்ச‌லும்….

பாஸ் செய்ய‌க் க‌ட‌வுளுட‌ன்
தேங்காய் உட‌ன்ப‌டிக்கைக் கையெழுத்திட்டு
க‌ல்லூரி ராகிங்கில் சட்டையின்றி ஓடிய‌தும்,
பெயர் கேட்க‌ப்போய்
அந்த‌ அக்காவின்
முறைப்பைச் சும‌ந்த‌தும்…

வான‌ம்பாடிக் கூட்ட‌மாய்
வாலிப‌ச்சோலையில்
வ‌ச‌ந்த‌துட‌ன் சந்தித்த‌
க‌ட‌லைப் பூக்க‌ளும்,
ச‌ந்தேக‌ம் கேட்டுச் சந்தித்த‌
வெள்ளை ம‌ன‌த்தோழிக‌ளும்…

ந‌ந்த‌வ‌ன‌த்திற்குச்
சொந்த‌மாய் வ‌ந்த‌‍‍ இந்த‌ ம‌ல‌ர்க‌ள்
கால‌க்காற்றில்
காய‌ம்ப‌டப் போவ‌தில்லை…
வாழ்க்கைச் சேற்றில் என்றும்
வாச‌மிழ‌க்க‌ப்போவ‌தில்லை.

No comments:

Post a Comment