Wednesday, October 30, 2019

தொட்டி மண்ணிற்குப் பழகும் வேர்கள்


விடுமுறை நாளுக்குப்பின்
திறக்கும் அறைக்குள்ளிருந்து
முகத்தில் பாய்கிறது வெப்பத்தின் நகங்கள்

முழுவீட்டை வெளியேற்றும்
தனியறையின் வெம்மை
நிறைக்கிறது நுரையீரல் பைகளை

பிரியமானவள் முதுகுப்பையில்
திணித்து அனுப்பிய நட்சத்திரங்கள்
குடிமேசையின் பியர் மூடிகளில் உறைகின்றன

துவைக்காத திருநாள் உடையின்மீது
கொசுமுட்டைகளின் கொலாஜ் சித்திரம்

பக்கத்து அறையிலிருந்து ஒலிக்கும்
தாபப் பாடலில் கல்லெறிகிறது
தெரு யாசகனின் பசித்த குரல்

தொட்டி மண்ணிற்குப் பழகும்
வேர்களை உறிஞ்சப் பற்றுகின்றன
அஜினமோட்டோவின் எட்டுக்கரங்கள்

சுவர்ப்பிடியை இழந்த பல்லி
இறக்கையற்ற கரப்பானாக
உருமாறி
ஓடத்தொடங்குகிறது
பொருள் தேடு நகர வீதிகளில்.


Saturday, October 12, 2019

திசைகள் சேர்கையில்


ஆசப்பட்ட பொம்ம
கைக்கிட்ட வந்திருச்சு
அதுக்குள்ள ஆசயெல்லாம்
வேற நெறம் மாறிடுச்சு
தேடிப்போன பாத தெரிஞ்ச பாத தான?
காலடியில் நிக்கிறத
ஊரெல்லாம் தேடுனயே
தேடுனியா இல்லியாண்டு
இத்தன நாள் தவிச்சிருந்தேன்
ஒங்கண்ண பாத்துப்புட்டேன்
சந்தோசம்,
போயிட்டு வா.
சேத்து வச்ச முத்தமெல்லாம்
ஒப்படைக்கத் தோணல இப்ப
ஒம்பாட்டுக்கு நீ போ
எங்கனவு எனக்குப் போதும்
வேறெதுவும் சொல்ல வேணாம்
என் ஊரு வந்துருச்சு.



எழுதிய நாள் 12 ஆகஸ்ட் 2019

எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்


நூலகத்தில்
ஒளியும் காற்றும் அதிகம் படா அடுக்கில்
ஒன்றின் தோளில் இன்னொன்றாக
சாய்ந்து நிற்கின்றன
கவிதைப் புத்தகங்கள்
துருவேறிய சங்கிலியின் கண்ணிகளென
புத்தகத்தின் எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
ஊர்ந்து செல்கின்றன
எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்
எடை குறைந்து நிற்கும் புத்தகங்களில்
இனி வாசிக்கலாம்
கவிஞன் எழுதாத
சில கவிதைகளை.




எழுதிய நாள் 12 செப்டம்பர் 2019

உப்புச்சிலை


அடையாளத்திற்கென ஒரு விரலை வைத்து
மூடிய புத்தகத்தோடு
காற்று வகுப்பெடுக்கும் ஜன்னலில்
பதிகிறாள் அவள்

விரல்வழி மேலேறி வருகிறது
ஒரு உப்புப் பாலை
இருவர் இருக்கையில்
உப்புச்சிலையாக அவள் ஒருத்தி

காற்று விசிறும் ஆணிகளை உள்வாங்கி
பாசி மூடிக்கொள்ளும் முகம்

இறுகிக்கொண்டே போகும்
கண்ணின் பனிக்குடம்
அந்தப் பெயரெழுதிய துளி விழுகையில்
உடையலாம்

பற்றிய இடத்திலிருந்து
விடாமல் வருகிறது ஒற்றை இழை
குச்சியின் சிறு பொறி போதும்
அறுத்துவிட

இழை தொட்ட
ஒரு புள்ளி ஈரப் பசைக்காக
உரசப்படாத தீக்குச்சியோடு
நீண்ட சாலையில்
போய்க்கொண்டிருக்கிறது
அவள் பேருந்து.



எழுதிய நாள்  30 செப்டம்பர் 2019

பெயர்களைச் சுமத்தல்


பெயர் மறந்து போன ஒருவரின் முகம்
நினைவில் வந்து வந்து போகிறது
அடர் நிறத்தவர்
தடித்த மீசை சிரிப்போடு இன்னும் அழகு
சற்றே குள்ளம்
மடித்த முழுக்கைச்சட்டையை
எப்போதும் இன்ஸெர்ட் செய்திருப்பார்
அகண்ட உள்ளங்கையால்
உறுதியாகக் கையைப் பற்றிக் கொள்வார்
சத்தமாகச் சிரிப்பார்
அவருடைய பெயர்....
அது சரி,
வெறும் பெயர்களைச் சுமந்து கொண்டு
என்ன செய்வது?!

Sunday, August 4, 2019

நீளப்பாதை


பாதையின் நீளத்தைச் சொல்லும்
தோலின் சுருக்கங்கள்

சேரும் இடம் வரை துணையாய்
பொதியின் பாரம்
பேச்சுக் கேட்க காற்றெங்கும் காதுகள்
கால்களைத் துரத்தும் கனவுகள்
எதிர்ப்படும் ஒரு துளிப் புன்னகையும்
கைப்பிடி வார்த்தைகளும்
வெக்கை தணிக்கும்
பின்வரும் உனக்கும்


நண்பன் ஜெயேந்திரராஜனின் ஒளிப்படத்திற்காக

எழுதிய நாள் 05/08/2019

Thursday, August 1, 2019

வழியிலாடும் புன்னகை


பயண தூரம்
வியர்வை அழுக்கு
உள்ளே அழுந்திக் கிடக்கும் வெயில் பாரம்
அனைத்தும் மலர்த்திப்போடும்
முன்னிருக்கையில் விளையாடும்
மழலையின் எச்சிலொழுகும் புன்னகை.



நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக


எழுதிய நாள் 11 டிசம்பர் 2018

பச்சையம் தேடி...

நீர்த்தடம் போகும் விதையின் கால்கள்
கள்ளிக்கும் வாழைக்கும்
பச்சையம் புகட்ட உண்டு
ஒரே சூரியன்

எழுதிய நாள் 24 நவம்பர் 2018
பெங்களுருவில் எடுத்த ஒளிப்படம்

அவர்கள்

கடலை எழுதும் வானம்
வானம் நொறுக்கும் அலைகள்
தொடுவானில் கூடி
கரையோரத்தில் ஊடி
அவனும் அவளுமாய்
அவன்களையும் அவள்களையும்
வேடிக்கை பார்த்தபடி
அவர்கள்.

எழுதிய நாள் 08 நவம்பர் 2018

பிறவி மயக்கம்

சா்ப்பமூறும் ஆப்பிள் மரங்களில்
பச்சை இருளுக்குள் ஏவாளைத் தேடிப் பயணம்.
குளத்துநீா்ப் பாசியைப்போல்
உள்ளிழுத்து மூடிக்கொண்டது காடு.
முயங்கிக்கிடந்த மரக்கிளைகளுக்கு வெளியே
வெற்றுக்கால்களால் சூரியன்
தூரப்பாலை நோக்கிப் போயிருந்தான்.
கதகதப்பிலிருந்து வெளிவந்த
விதையிலைகள் சோம்பல் முறித்தன
இருதிசைகளில் கைகளை நீட்டி.
ஈரவயிற்றால்
பூமியை உந்தித்தள்ளும் நத்தையோடு
கதைபேசி நடந்துகொண்டிருந்தது
கருப்புமுயல்.
ஏவாளின் வாசனை வந்த திசையில்
ஆடைகளைக் களைந்து ஓடினேன்.
வானம் நோக்கிய கண்ணீரோடு
நட்சத்திரத்துக்காகக் காத்திருந்தாள்
நிறைசூல் வயிற்றுக்காரி.
மூக்கில் காயம் கொண்டவளும்
இன்னொருத்தியும் நீராடிக்கொண்டிருக்க
பத்துக்குரல்களில் பாடிக்கொண்டிருந்தான்
காவல் நின்றவன்.
ஒற்றைமுலைக்காரியின் ஏக்கப்பார்வை கடந்து
மறைவிலிருந்து வந்த அம்புக்குத் தப்பித்து
வெண்பூக்கள் உதிரும் மரத்தடியில்
ஏவாளைத் தேடிக் களைத்தமர்கிறேன்.
தொப்பூழ்க் குழியிலிருந்து வியர்வை வடிய
தலையில் மெள்ள முளைக்கிறது
கொம்புகள் இரண்டு.


எழுதிய நாள்  07 நவம்பர் 2018 

கதவுகள்

வெறும் சுவா்களை வீடுகளாய் மாற்றும் கதவுகள்
மூடப்படும் நேரத்தில்
ஒரு கதாபாத்திரமென உயிர்பெறுகின்றன.

மூடிய கதவுக்கு வெளியில் படுத்திருக்கிறது ஒரு வீதி
நகங்களுக்குத் தப்பிவிட்ட
இரையொன்றை எதிர்பார்த்தபடி

யாரையேனும் அழைத்துக்கொண்டேயிருக்கும்
மூடிய கதவுகளிலிருந்து கசிகின்றது
ஆப்பிள் மர இலைகளின் வாசனை.

அறைந்து மூடப்படும் கணத்தில்
ஊறத்தொடங்குகிறது
உள்ளிருந்தழிக்கும் ஆழ்ரணங்களின் நஞ்சு

பெருங்காரியவீட்டு ஷாமியானாவில்
தேங்கிநிற்கும் மழைநீா்
மூடிய கதவுக்கு வெளியே சொட்டிக்கொண்டிருக்கிறது.
நிலைப்படியில் உதிரும் உப்புத்துளிகள்
செதுக்கிய பூக்களின் அலங்காரச் சாயம்

கதவு திறக்கக் காத்திருக்கும்
கண்களின் சுரப்பிகளில்
கரையான்களின் சுவா்கள் உயா்கின்றன.

காய்ந்த புற்களின் வார்த்தைகளைக்
கோர்த்தபடி நிற்கும்
செவ்வக வடிவ இசைத்துணுக்கு அது.

படிக்கட்டுகளில் விழுந்து புரள்கிறது
வௌவால்களின் ஓலம்



நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக 
எழுதிய நாள்  05 நவம்பர் 2018 

சாதிக்குறி

நந்தினியோ ராஜலெட்சுமியோ
பெயரில் என்ன இருக்கிறது
எல்லாரும் தேவடியாக்கள் தானே உனக்கு

தலையைத் தனியே அறுத்து எடுக்கும் வரை
நிமிர்ந்தேதான் இருந்ததா உன் குறி?

வீட்டுக்கு விலக்காகி அமர்ந்திருந்த
உன் சகோதரியிடமா?
சமைத்துக்கொண்டிருந்த உன் தாயிடமா?
அறுத்த தலையை
யாரிடம் முதலில் காட்டினாய்?

தலையிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த ரத்தத்தில்
தன் தூமையின் மணம்
இருந்ததாகச் சொன்னாளா உன் தாய்?

சேரிக்குப்பூட்டிய உன் கோயிலில்
வைத்தாயா?

எட்டி உதைப்பதற்கும்
ஏறிப் புணா்வதற்கு மட்டும்
தீட்டில்லையோ உனக்கு?

இத்தனை
எரித்தாய் சிதைத்தாய் அறுத்தாய்
நிறைந்துவிட்டதா உன் தாழி?

இன்னும்
எத்தனை சவக்குழிகளைத் தோண்டுவதற்குத்
தயாராய் இருக்கிறது
உன் குறி?

எழுதிய நாள்  26 அக்டோபர் 2018 

அவன் இல்லை இப்போது

அவன் இறந்துவிட்டான்
அவனுக்கு ஒரு பெயா் இருந்தது
அவனுக்கென ஒரு மணம் இருந்தது
அவனுக்கென சில அடையாளங்கள் இருந்தன
இப்போது எல்லாம் வேறாக.
நிறையப் பகிர்ந்தவன் அவன்
சிரிப்பு கண்ணீா் ரத்தம்
வியா்வை எச்சில் முத்தம்.
அவனுக்கென தோழா்கள் தோழிகள் காதலிகள்
யாருக்கு அறிவிப்பது இவன் மரணத்தை?
எவருடைய கண்ணீா் வேண்டும் இந்த உடலுக்கு?
அவன் இல்லை இப்போது.


எழுதிய நாள்  24 அக்டோபர் 2018

வடிவேலு கவிதை-1


படுக்கையறையின் நிசப்தம் நிறைந்த
பின்னிரவின் ஒரு நேரத்தில்
நிமிடத்திற்கிரு குறுஞ்செய்திகளால்
முத்திக்கொண்டோம்
கடைசியாய் ஒளிர்ந்த திரை
உன்பெயருடன் சொன்னது
”இதோ வந்துடறேன்”
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கா………….த்திருந்தேன்
உறக்கத்தின் வீதிக்குள் புகுந்த நீ
என்னை வாசலில் நிறுத்திவிட்டாய்.
அந்த வேளையில் கூா்க்காவைப் போல்
சுற்றிக்கொண்டிருந்த தேவதைகளை நோக்கிக் கத்தினேன்
”நானும் எவ்வளோ நேரம்தான் தூக்கம் வராத மாதிரியே….”

எழுதியது   2012ம் ஆண்டில் ஒரு நாள்

தற்கொலைக் குறிப்புகள்


அவன் தற்கொலை செய்துகொள்வது இதுதான் முதல்முறை
இதற்குமுன் முயற்சித்தது இல்லை.
இம்முறை வெற்றிகரமாக நிகழ்ந்துவிட்டது அவன் தற்கொலை
மறுபடியும் வேறுமுறைகளில் முயற்சிக்கும் எண்ணமுண்டு
நல்ல கவிதையோ சிறுகதையோ
வாசித்துவிட்டுப்பின் நிகழ்த்தலாம்.
அவனறியா நிலத்தில் புதிய கண்களைக்
காதலிக்கத் தொடங்கியிருக்கலாம்.
மது அருந்திவிட்டு சிறிது புன்னகையுடனோ
கண்ணீா் நிரம்பிய ஒரு கலவிக்குப்
பின்போ நிகழ்த்தலாம்.
அடுத்த தற்கொலைக்குமுன்
மின்னனுத் திரையில் கவிதை எழுதுபவனின்
தோளருகில் நின்று கவிதை வாசிக்கலாம்
அல்லது
இப்போதுபோல்
இதை வாசித்துக்கொண்டும் இருக்கலாம்.
ஒரு ஆறுதல்
தற்கொலைக் கருவிகளை நம்மிடமிருந்தே
எடுத்துக்கொள்ளும் அவன்
தற்கொலைக் குறிப்புகள் எழுதுவதில்லை.


எழுதிய நாள்  9 அக்டோபர் 2018

உடும்பின் காலடிக் காலம்


எப்போதும் என் நிறுத்தத்தில் இறங்கியதில்லை நான்
மழை ஒரு திசையில் அடித்துச் செல்லும்
பாடல்களில் ஒரு முள்கொக்கி தொங்கும்
ஐந்து விரல்களில் பத்து விரல் சுவடுகள்
உறக்கத்தில் இடறும் கண்ணீர்
முயக்கத்தில் வேறு வியர்வைச் சுவை
மரக்கிளையின் மீது உதிரும் இறகுக்கு வானம் பார்த்து ஏக்கம்
நீளக்கொடியின் கொழுந்துகளில் நரம்புகளென வேர்கள்
தழும்புகளை வருடும் விரல்களில் வெட்டுக்காயத்தின் பிசுபிசுப்பு
பொடியும் சுவரைப் பற்றிக்கொண்ட உடும்பின் கால்களைச் சுற்றி
காலம் நடந்துகொண்டிருக்கிறது
தந்திகளில் பின்னிய சிலந்திக்கூடுகளில்
விடுபட்ட நட்சத்திரங்களைத் தேடி
அளைகின்றன இசையறிந்த விரல்கள்.

எழுதிய நாள்  6 அக்டோபர் 2018

மலேசியா வாசுதேவன்


Mr. Malaysia vasudevan,
உங்களையெல்லாம் என்ன செய்வது?
நீ ஆண்களின் கண்ணீர்.
அவர்களின் மதுவுக்கான கலவைப்பானம் நீ.
தகப்பன்கள் தூக்கியலையும் பழைய காதல்.
பவுடர் வாசனையோடு கடந்து போகும் வற்றிய நினைவு
திருவிழாவின் வளையல்காசு
கிடாவெட்டு முடிந்த ஊரின் கலைத்துப்போட்ட பந்தல்
லாரி டிரைவர்களின் சமையல் விறகு
கீதாரிகளின் பனிச்சாமம்
ஊர்ப்பொட்டலின் மதிய வெயில்
திருப்தியற்ற மலட்டுக் கலவியின் பெருமூச்சு
கிழிசலின் வழி பாயும் ஊசியும் நூலும்
சுருக்கங்கள் தடவிச் சிரிக்கும் பீடிப்புகை
மேல்துண்டில் படிந்த மஞ்சள் கறை
வழியனுப்பி விட்டு வருபவனின் ஒற்றையடிப் பாதை
பஸ் டிரைவர்களின் நள்ளிரவுப்பானம்
உன் கல்லறையில் விழும் மலர்களில்
இவர்கள் கண்ணீரும் இருக்கும்.
என்றைக்குமான கைதட்டல் அது.


எழுதிய நாள்  6 அக்டோபர் 2018

ஆதித்தாய்


விரிந்த வாய் நுழையும்
கங்கையும் கழிவும்
உப்பால் புதுப்பெறும்.
கதிர் பிரிந்த நிறமிகளின்
அகங்காரம் மென்று
அலையால் அசைபோடுகிறாள்
பூமிக்கலயத்தின் ஆதித்தாய்.

நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள்  4 அக்டோபர் 2018

வனத்தீ


இரு கைகளை நீட்டி உன்னை அழைக்கிறேன்
வா
உன் விம்மல்களை என்னிடம் ஒப்படைத்துப்போ
உன் கண்ணீரை என் தோள்களில் இறக்கிவை

நீ வனத்தீ
நீ விரும்பிய வனத்துள் இறங்கி நட.
கணக்கும் அத்தனையும் கழற்றி எறி
பசிய சேற்றைப்போல் நிா்வாணத்தைப் பூசிக்கொள்

கந்தகற்றப்பட்ட யோனிகளைப்போலுள்ள இமைகளைப் பிாி
கண்களுக்கு மறுக்கப்பட்ட அத்தனை பானங்களையும் குடி

சங்கிலிகளை உதறிய நாவினால் நீயிசைக்கும் பாடல்கள்
நான்கு கண்ணாடிச் சுவா்களையும் நொறுக்கட்டும்

அந்தப்பிாிய மிருகத்தை அவிழ்த்துவிடு
உடலின் அத்தனை நாக்குகளாலும்
தீயை பனியைப் புசிக்கட்டும்.

மணமூட்டிகள் வேண்டாம்
மலைப்பூவாய் பூத்திருக்கும் உடலெடுத்து
ஒலிக்கும் இசைக்கு ஊழியாய் நடனமிடு
காதல் கடிதங்கள் காற்றில் ஒழியட்டும்

உன் கண்ணீா்த்துளிகளை மாலையாய் அணிந்து
முத்தங்களை ஏந்தியபடி எதிா்ப்படும் என்னைக் கடந்து நட
சங்கிலிகளற்ற திசையிலிக்குள்.
நிறைந்த தகப்பனாய்ப் பாா்த்திருக்கிறேன்



எழுதிய நாள்  19 செப்டம்பர் 2018