Showing posts with label காதல் திசை. Show all posts
Showing posts with label காதல் திசை. Show all posts

Saturday, October 12, 2019

திசைகள் சேர்கையில்


ஆசப்பட்ட பொம்ம
கைக்கிட்ட வந்திருச்சு
அதுக்குள்ள ஆசயெல்லாம்
வேற நெறம் மாறிடுச்சு
தேடிப்போன பாத தெரிஞ்ச பாத தான?
காலடியில் நிக்கிறத
ஊரெல்லாம் தேடுனயே
தேடுனியா இல்லியாண்டு
இத்தன நாள் தவிச்சிருந்தேன்
ஒங்கண்ண பாத்துப்புட்டேன்
சந்தோசம்,
போயிட்டு வா.
சேத்து வச்ச முத்தமெல்லாம்
ஒப்படைக்கத் தோணல இப்ப
ஒம்பாட்டுக்கு நீ போ
எங்கனவு எனக்குப் போதும்
வேறெதுவும் சொல்ல வேணாம்
என் ஊரு வந்துருச்சு.



எழுதிய நாள் 12 ஆகஸ்ட் 2019

உப்புச்சிலை


அடையாளத்திற்கென ஒரு விரலை வைத்து
மூடிய புத்தகத்தோடு
காற்று வகுப்பெடுக்கும் ஜன்னலில்
பதிகிறாள் அவள்

விரல்வழி மேலேறி வருகிறது
ஒரு உப்புப் பாலை
இருவர் இருக்கையில்
உப்புச்சிலையாக அவள் ஒருத்தி

காற்று விசிறும் ஆணிகளை உள்வாங்கி
பாசி மூடிக்கொள்ளும் முகம்

இறுகிக்கொண்டே போகும்
கண்ணின் பனிக்குடம்
அந்தப் பெயரெழுதிய துளி விழுகையில்
உடையலாம்

பற்றிய இடத்திலிருந்து
விடாமல் வருகிறது ஒற்றை இழை
குச்சியின் சிறு பொறி போதும்
அறுத்துவிட

இழை தொட்ட
ஒரு புள்ளி ஈரப் பசைக்காக
உரசப்படாத தீக்குச்சியோடு
நீண்ட சாலையில்
போய்க்கொண்டிருக்கிறது
அவள் பேருந்து.



எழுதிய நாள்  30 செப்டம்பர் 2019

Thursday, August 1, 2019

அவர்கள்

கடலை எழுதும் வானம்
வானம் நொறுக்கும் அலைகள்
தொடுவானில் கூடி
கரையோரத்தில் ஊடி
அவனும் அவளுமாய்
அவன்களையும் அவள்களையும்
வேடிக்கை பார்த்தபடி
அவர்கள்.

எழுதிய நாள் 08 நவம்பர் 2018

வடிவேலு கவிதை-1


படுக்கையறையின் நிசப்தம் நிறைந்த
பின்னிரவின் ஒரு நேரத்தில்
நிமிடத்திற்கிரு குறுஞ்செய்திகளால்
முத்திக்கொண்டோம்
கடைசியாய் ஒளிர்ந்த திரை
உன்பெயருடன் சொன்னது
”இதோ வந்துடறேன்”
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கா………….த்திருந்தேன்
உறக்கத்தின் வீதிக்குள் புகுந்த நீ
என்னை வாசலில் நிறுத்திவிட்டாய்.
அந்த வேளையில் கூா்க்காவைப் போல்
சுற்றிக்கொண்டிருந்த தேவதைகளை நோக்கிக் கத்தினேன்
”நானும் எவ்வளோ நேரம்தான் தூக்கம் வராத மாதிரியே….”

எழுதியது   2012ம் ஆண்டில் ஒரு நாள்

உன் கண்ணீர்


உன்னைப்போல் இல்லை நீ விட்டுச் சென்ற கண்ணீர்
என் வீட்டுத் தண்ணீரில் உப்பு அதிகமென்றது
உன்னைவிட எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவென்றது
பகல் வெளிச்சம் அதற்குக்கூச்சம் தருவதாயிருக்கிறது
இரவுகளில் உன் கண்ணீர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது
குளியலறையில் நான் வெகுநேரம் இருப்பதில்லையெனக்
குறைப்பட்டுக்கொண்டது
வேறு வேறு குரல்களைக் கேளாமல் சுணங்கிப்போனது
பக்திப்பாடல்களை ரசித்துக்கேட்டது
சமையலறை நெடியை ஆழச் சுவாசித்தது
எல்லாப் பாடல்களுக்கும் வாயசைத்தது
தோட்டச்செடிகளிடம் உரக்கப் பேசியது
மதுப்புட்டிகளை கூர்ந்து பார்த்தது
படுக்கையறைச் சுவர்களில் குரல்களைக் கிறுக்கியது
நாட்குறிப்பின் தாள்களில் நிரம்பி வழியும்
உன் கண்ணீரை என்னால் கையாள முடியவில்லை
உடனே வந்து கூட்டிச்செல்.





எழுதிய நாள்  17 செப்டம்பர் 2018

Wednesday, August 15, 2018

நிலத்தடித்தாகம்

கீழும் மேலுமாய் ஊரும்
எறும்புகளின் கால்களில் பொடிகின்றன
குளத்தங்கரை ஓரத்தில்
நாம் செய்து வைத்த களிமண் சிலைகள்

காசு வைத்துப்பின்னிய மோதிரத்தின்
வண்ண நரம்பின் பின்னல்கள்
சாயமிழந்து தளர்ந்திருக்கின்றன

நிறைந்திருக்கும் பெட்டியின் அடியில்
மடிப்புக் கலையாத உன் மேலாடை
சாரம் குறைந்த உன் வியர்வை மணத்தோடு

பழகிய தடங்கள்
மங்கலானதின் பெரும்பாரம்
நுகத்தடித் திமில்களில் வதை கூட்டுகிறது.

கருப்புப்பறவை கொத்தித் தின்றது போக
மீதி விதைத் தானியங்கள்
வேர்விடக் காத்திருக்கின்றன
முத்தங்களின் ஈரத்தில்

வற்றிய குளத்துச் சேற்றில்
மூச்சைச் சேமிக்கின்றன
கடைசிச் சந்திப்பின் சொற்கள்

நிலம் மூடிய நீர்ப்பாதையின் வெம்மையைக்
கடக்கும் மேகங்கள்
தணிப்பதில்லை.

இன்மையை முழுமையாக்க
கொஞ்சம் வலுத்த காற்று
அல்லது
இன்னும் கொஞ்சம் எண்ணெய்யின் ஈரம்.

காத்திருக்கிறது
அரசமரத்தடி அகலின் சுடர்.





எழுதிய நாள் : 14-ஆகஸ்ட்-2018

ஆற்றின் மொழி

வெள்ளம் ஆடிச்சென்ற மணற்சுழியுள்
பாதி நாட்களைப் புதைத்துக் கிடக்கிறது
என் நாட்குறிப்பு.
நாட்குறிப்பின் பக்கங்களின் மீது
ஆற்றின் அகன்ற சக்கரங்கள்
வரைந்த குறுமணல் ஓவியம்.
எழுத்துக்களை இழுத்துச்சென்ற ஆறு
வெற்றுப் பக்கங்களையும்
செந்நிறத்தில் முற்றுப்பெறாத சில
கவிதைகளையும் விட்டுச்சென்றிருக்கிறது.
ஆறடித்துச்சென்ற எழுத்துக்களை மீட்டு
பழைய சாயலில்
ஏதோ ஒன்றாய் முடித்துக்கொள்வேன்.
எழுதிய கவிதைகளை நிறைத்துவைக்க
மீண்டும் வருமா
அந்த ஆறு?


எழுதிய நாள் : 2013 ல் ஒரு நாள்

வெம்மை மணக்கும் காற்று

இலை தின்ற மரத்தின்
இலை தளிர்க்கையில்
கிளை மாறி அமர்கிறது காலம்

ஓடிக்கடக்கும் ரயிலின் சிறுபொழுது நிழல்
தண்டவாளத்தில் பரந்திருக்கும்
காய்ச்சல் தணிக்கும்.

ஈரம் உலர்ந்த துணிகள் கிடந்த
கயிற்றுத் தந்திகளில்
வெம்மை மணக்கும் காற்று இசைக்கிறது
தனிமையின் பாடலை

இறுகக் கட்டிய
நார் முடிச்சுகளில் திறக்கும் மொட்டுகள்
வண்டுகளுக்கு அனுப்புகின்றன
புது முகவரியை

மண்ணைத்தொட்ட விழுதுகளில்
கடந்த காற்றின்
வியர்வைப் படிவு.

காக்கைகளின் திறந்த வாய்களில்
பசியாற்றிக் கொள்ளும்
கூரைப் பருக்கைகள்

வடிவங்களைத் தூர்த்துப் பாயும்
நீர்மையாம்
தகிக்கும் பசி.



எழுதிய நாள் : 30-ஜூலை-2018

திரிந்த நிறமிகள்

நினைவுகளின் நிறமிகள்
திரிந்து போன நாட்களில் நீ வந்தாய்.
கூர்த்த சிலவற்றை மழுங்கச்செய்திருந்தேன்
வனத்தில் நீந்திய வேர்களைத்
தொட்டிகளுக்குள் அமிழ்த்தியிருந்தேன்
உன் அதிர்வுகள் பதிந்த நிலமிது.
உன் எச்சங்களைத் தேடி நீ வந்திருப்பாய்
உன்னை இழுத்துவந்த தாழம்பூ மணத்தால்தான்
என் அறைநாற்றம் போக்கிக்கொண்டிருக்கிறேன்.
உன்னிலிருந்து நான் வெகுதூரகாலம் விலகியிருக்கிறேன்.
நீ நீயாகவே இருந்தாய்
உன் பலத்தின் மீது என் பயம் இருந்தது
என் ஆயுதமும் இருந்தது.

உன் சிதைந்த தலையிலிருந்து இரத்தத்தோடு ஒழுகும்
நினைவுகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
மாறாபயத்தோடு.
பொழிகாட்டின் ஒற்றையடிப்பாதையென
நீண்டு கிடக்கும் உன்னைத்
தூக்கியெறியத் தவித்திருக்கிறேன்.

என்னை ஏளனம் செய்கிறாய்
சுழிக்கும் உதடுபோல்
அசையும் உன் வால் நுனியால்.




எழுதிய நாள் : 02-ஜூலை-2018

பெருமீன்கள் உலரும் கரை

மெட்டி விரல்களை அலைகள் நனைக்க
கடல் பார்த்து நின்று கொண்டிருக்கிறாள்.
உதட்டில் படியும் உப்புக்காற்றில்
வேறொரு எச்சில் சுவையின் ரேகைகள்.
கண்களின் சுரப்பியை உறிஞ்சிய
மேகம் கருஞ்சூலியான பொழுதில்
ஒரே நிறம்
ஒரே மொழி
ஒரே சுவை
கடல் அவள் வானம்.
நிலவின் செதில்களைப் புடைக்கும் அலையில்
காட்சிப்பிழையாய் தூரப் படகொளி.
பெருமீன்கள் உலரும் கரையில்
வெற்றுத்தூணாய் நிற்கிறாள்
திசையின் தீயை அணைத்து.


எழுதிய நாள் : 24-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல் 2018 இதழில் பிரசுரமானது

தொலைந்த நாள்

அந்த நாள்தான் எங்கோ தொலைந்துவிட்டது
அதனோடு அந்த முதல் வார்த்தையும்.
அவளிடம் அந்த நாள் பத்திரமாக இருக்கிறதென்றாள்.
ஆனால்
எனக்கும் அவளுக்கும் அந்த நாள் வேறுவேறாயிருந்தது.

கடந்தவைகளின் மாயப் புதிரறையில்
உள்ளிழுத்த வாசல்தேடி
ஒவ்வொரு நாளாய்த் திறந்து பார்க்கிறேன்.

காலத்தின் நிழற் சிதிலங்களுக்குள்
அலைந்தலைந்து 
வேறு நாட்களின் கண்ணிகளில் சிக்கிக்கொள்கிறேன்.

இரைபிடிக்கும் பல்லியின் நாக்கு
குவியும் கணத்திற்கு முந்தைய கணத்தில்
உருமாறிப் பறக்கிறது அந்த நாள்.

எப்படியாவது அந்தநாளைப் பிடித்து
அவளைப் பார்த்த முதல்பொழுதைச் 
சிறிது கலைத்துவிட்டால் போதும்.
இந்த வார்த்தைகளையும் சேர்த்து
ஆணிகள் பதியாச் சுவராயிருக்கும்
நிகழ்கணம்.


[புதிரறை=Maze]

எழுதிய நாள் : 22-ஜனவரி-2018

புகைப்படத்தில் ஊரும் எறும்புகள்

இடுப்பு வரை தெரியும்
உன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நம் கட்டில் பொழுதின் எறும்புகள்
படத்தின் மீது ஊர்கின்றன
காமத்தின் காய்ந்த பாகினைக் கால்களில் சுமந்தபடி.
படத்தின் மேலடுக்கிலிருந்து வெளியேறும்
உன் வியர்வையின் படலத்துள்
அமிழ்ந்து போகிறது இந்த நொடி.
நடுங்கும் அனலோடு
உன்னுதட்டு வாசத்தைப் பறித்துக்
கோர்க்கின்றன என் விரல்கள்.
கண்களுக்குள் ஒளிரும்
வெட்கப்பரல்களைத் தொடும் பொழுதில்
உயரம் குறைந்து ஒளிப்புள்ளியின்
ஒற்றையருவியாகிறேன்.
வேரகழ்ந்த மரத்தின் விழுதுகளில்
அறுந்த கண்ணிகள்
நட்சத்திரச் சங்கிலியாய்த் துளிர்க்கின்றன.


எழுதிய நாள் : 19-ஜனவரி-2018

அகழிக்குள் முளைக்கும் ஆப்பிள் மரங்கள்

தன் வாலைக் கடிக்க முனையும்
நாயைப் போலவே
உன்னைத் தொட்டுவிடும் என் முயற்சி

சிலந்தியின் ஒற்றையிழையால் பிணைத்திருக்கிறாய்
என்னை
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்

நமக்கிடையே நீ
உருவாக்கிய அகழிக்குள்
முளைத்துக்கிடக்கின்றன
ஆப்பிள் மரங்கள்

கால்கள் பிணைக்கப்பட்ட கன்றினைப்போல்
உன் நிலத்தில்
இரண்டுகால் சுதந்திரத்தோடு
என்னை உலவவிட்டிருக்கிறாய்

எனக்குள் பூகம்பம்
நிகழும் நுண்நொடிக்குமுன்
குறுஞ்செய்தி சில நிமிடப்பேச்சு
ஏதோ ஒன்றினால்
என்னைச் சீர் செய்துவிடுகிறாய்
கவிதை, கண்ணீரின்றிக் காய்ந்துகிடக்கிறது
என் நாட்குறிப்பு

புற்களின் காட்டுக்குள்
சிற்றெறும்பென ஊரித்திரியும்
என் இதயத்துடிப்பை இறக்கவிடாது
குளிரறைக்குள் வைத்திருக்கிறாய்

கதவுகளற்ற சிறைச் சுவர்கள்
புலன்களைத் தொடவிடாது
என் கால்சங்கிலிகளுடன் திரிகிறேன்
உன் பெருங்கொடையான
சீசாச் சமுத்திரத்திரத்துள்.




எழுதிய நாள் : 11-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல்-2018 மாத இதழில் வெளியானது.

Friday, March 9, 2018

இணைச்சொல்


என் வாழ்த்து இல்லாமலும் நீ கொண்டாடுவாய்
என் கைகள் தொடாமலும் உன் கண்ணீர் காயும்
என் நதி பாயாமலும் உன் தோட்டம் பூக்கும்
அணுச்சுழற்சி வேகத்தில்
எதிர்த்திசைப் புள்ளிகளின் அமைவிடம்
எனதுமாகும்
உனதுமாகும்
உன் வரிகள் இல்லாமலும் என் பாடல் ஒலிக்கும்
உன் வியர்வை படாமலும் என் கூடல் அமையும்
உன் கண்ணீர் காணாமலும் என் ஊர்வலம் நிகழும்
அந்தச் சொல்
இல்லாமலும்
இந்தக் கவிதை முடியும்.







எழுதிய நாள் : 10-01-2018

வெம்மைப் புகை (அ) வாழ்த்துகள்


உனக்கும் எனக்குமென
நான் வனைந்து வைத்திருந்த நாளின் பிரதியில்
நின்றுகொண்டிருந்தாய் வேறொருவனோடு

எளியதும் துரதிர்ஷடமானதுமான
ஓர் உறவுச் சொல்லால் அறிமுகப்படுத்தினாய்
என்னை அவனிடம்

தோள் மாலைக்கடியிலும்
அடர்நிற உதட்டுச் சாயத்திலும்
நசுங்கிக்கிடந்தன
என் முத்தத்தின் தடங்கள்

அவசரமாய் நிகழ்ந்துவிட்ட
நம் கூடலின் வெம்மை
அலங்கார விளக்குகளின் ஜொலிப்பில்
நிம்மதியாய் மூழ்கிப்போயிருந்தது

மருதாணி பூசிய ரேகைகளுக்குள்
நொடிப்பொழுது வாழ்ந்துவிட்டு
உதிரமற்ற புன்னகையுடன் வெளியேறுகிறேன்
உங்களைத் தாங்கிய ஃப்ளெக்ஸ் போர்டைக் கடந்து

நீ பொய்த்த சத்தியங்களால் தகிக்கும்
என்னறையின் இன்றைய இரவில்
பழைய நாட்குறிப்பொன்றின்
காமம் வீசும் பக்கங்கள் மீது
பல்லிகள் புணர்ந்திருக்கும்.




எழுதிய நாள் : 08-01-2018
 

Monday, January 8, 2018

எண்களின் மரம்

அவளுக்கு எண்களைப் பிடிப்பதில்ல
எண்ணிக்கையில் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை
பிறந்த தேதிகளும் நினைவிலிருப்பதில்லை
செங்கோடையில் பிறந்தவன் நீ
தண்பனியில் பிறந்தவள் நான் என்பாள்
அவள் மச்சங்களை நான் எண்ணுகையில்
பறவைகள் நட்சத்திரங்களை எண்ணுவதில்லை என்பாள்
அந்த நீண்ட முத்தத்தின் பின்
இருபது நிமிட முத்தம் என்றேன்
மழையைத் துளிகளால் அளக்காதே என்றாள்
எத்தனை நாட்கள் தனித்திருந்தோம்?!
என்ற என் ஆயாசக் கேள்விக்கு
நமக்கிடையே ஓங்கிப் பெருத்த மரம் இருந்தது
எனச் சொல்லிய அவள் பெருமழையானாள்.
பறவை உயரே பறக்கத் தொடங்கியது.
ஒரு விதையாய்ச் சுழிந்து ஒடுங்கியது
எண்களின் மரம்.


{டிசம்பர் மாத அச்சாரம் இதழில் பிரசுரமானது}

எழுதிய நாள் : 20-நவம்பர்-2017

காலத்தின் பிசின்

நத்தையூர்ந்த மணல்தடத்தில்
குமிழ்ந்தூறும்
என்றோ புதைந்த முத்தங்கள்

ஆவியாகாத முத்தப் பொழுதுகளின் ஈரம்
பிசினாய் சுரக்கும்
பச்சையம் இற்ற கிளைகளில்

கருநாக விஷத்தின் அதிதூய்மையுடன்
ஒரு முத்தம் உறைந்திருக்கிறது
படிமமாய்க் கிடக்கும் ஆதிமனிதனின் உதடுகளில்

அருகில் இல்லாத போதில்
காற்றில் உதிர்க்கப்பட்ட முத்தங்கள்
மகரந்தம் பூசிய கால்களால்
காற்றில் வரைகின்றன உதட்டுக் கோடுகளை

இறுக்கிப்பிணைத்த விரல்களுக்கிடையில்
சத்தமின்றி கடத்தப்படுகிறது
முத்தம் ஒன்று.

பரிசுத்தமான ஒரு முத்தம்
உதடுகளில் இருக்கிறது
இன்னும் தரப்படாமலே



எழுதிய நாள் : 24-ஜூன்-2017

மழையின் நாள்

அந்த இரண்டு நாட்களுக்கிடையில்
மழையைத்தவிர வேறொன்றும் இல்லை
மழையின் றெக்கைக்குள்ளிருந்து
வந்து விழுந்ததுதான் அந்த நாள்
மழையெழுப்பிய சிறுகுன்றுகள் மீது
ஏறவியலாது விழுந்தன
பேசியிருக்க வேண்டிய வார்த்தைகள்
அந்த நாளின் மீது படர்ந்த ஒரு விதை
மழையின் பச்சை குடித்து
வேர்களில் வெம்மை கொண்டது
மற்றொரு மழை வந்து தூக்கிப் போகும் வரை
நேற்றும் ஆகாமல் நாளையும் ஆகாமல்
அது
அங்கேயே கிடக்கும் அந்த நாளாகவே
அந்த நாளின் மீது இடறும்
கால்களில் ஒட்டிக்கொள்ளக்கூடும்
அதனுள் கிடக்கும்
தரப்படாத முத்தமும்
முளைத்துக்கொண்டிருந்த ஒரு கத்தியின் கூர்முனையும்.


எழுதிய நாள் : 20-ஜூன்-2017

Friday, January 5, 2018

நீநான்நீ

கண்ணீரும் இல்லை மென்னகையும் இல்லை
சேரவும் இல்லை விலகவும் இல்லை
உன்னுள்ளும் இல்லை வெளியிலும் இல்லை
நீயாகவும் இல்லை நானாகவும் இல்லை
நான்நீநீநான்நீ.


எழுதிய நாள் : 20 மார்ச் 2017


உனக்கான மழை


நீ காணாத
இரவு மழையைச்
சேர்த்து வைத்திருக்கிறேன்
உன்
தோட்டத்து இலைகளில்.


ஒளிப்படம் சுப.முத்துக்குமார்
எழுதிய நாள் : 09 மார்ச் 2017