Friday, March 9, 2018

இணைச்சொல்


என் வாழ்த்து இல்லாமலும் நீ கொண்டாடுவாய்
என் கைகள் தொடாமலும் உன் கண்ணீர் காயும்
என் நதி பாயாமலும் உன் தோட்டம் பூக்கும்
அணுச்சுழற்சி வேகத்தில்
எதிர்த்திசைப் புள்ளிகளின் அமைவிடம்
எனதுமாகும்
உனதுமாகும்
உன் வரிகள் இல்லாமலும் என் பாடல் ஒலிக்கும்
உன் வியர்வை படாமலும் என் கூடல் அமையும்
உன் கண்ணீர் காணாமலும் என் ஊர்வலம் நிகழும்
அந்தச் சொல்
இல்லாமலும்
இந்தக் கவிதை முடியும்.







எழுதிய நாள் : 10-01-2018

என் உருவங்கள்


என் சித்திரத்தை வரைவதில்
சிரமமேயில்லை
அவர்களுக்கு.

பல பெயர்களில்
பல நிறங்களில்
பல வாசனைகளில்
பல வடிவங்களில்
அவரவர் கைகளில்
என் உருவம்.

உதட்டச்சும்
செருப்புத்தடமுமாய்
அவர்களின் நாற்றத்தையும் நிறத்தையும்
பதிகிறார்கள்
என் உருவத்தின் மீது.

ம்...
கருப்போ வெள்ளையோ
அவர்கள்
என் சித்திரத்தை
வரைந்து கொண்டேயிருக்கிறார்கள்
பிதாவே.




எழுதிய நாள் : 09-01-2018

வெம்மைப் புகை (அ) வாழ்த்துகள்


உனக்கும் எனக்குமென
நான் வனைந்து வைத்திருந்த நாளின் பிரதியில்
நின்றுகொண்டிருந்தாய் வேறொருவனோடு

எளியதும் துரதிர்ஷடமானதுமான
ஓர் உறவுச் சொல்லால் அறிமுகப்படுத்தினாய்
என்னை அவனிடம்

தோள் மாலைக்கடியிலும்
அடர்நிற உதட்டுச் சாயத்திலும்
நசுங்கிக்கிடந்தன
என் முத்தத்தின் தடங்கள்

அவசரமாய் நிகழ்ந்துவிட்ட
நம் கூடலின் வெம்மை
அலங்கார விளக்குகளின் ஜொலிப்பில்
நிம்மதியாய் மூழ்கிப்போயிருந்தது

மருதாணி பூசிய ரேகைகளுக்குள்
நொடிப்பொழுது வாழ்ந்துவிட்டு
உதிரமற்ற புன்னகையுடன் வெளியேறுகிறேன்
உங்களைத் தாங்கிய ஃப்ளெக்ஸ் போர்டைக் கடந்து

நீ பொய்த்த சத்தியங்களால் தகிக்கும்
என்னறையின் இன்றைய இரவில்
பழைய நாட்குறிப்பொன்றின்
காமம் வீசும் பக்கங்கள் மீது
பல்லிகள் புணர்ந்திருக்கும்.




எழுதிய நாள் : 08-01-2018
 

சொல்


சொற்களால்
நிறைந்திருக்கிறது வாழ்க்கை
என்ற சொல்லும்.



எழுதிய நாள்: 6-1-2018

நீர்மையின் நிறம்

ஒரு குடம் நிறைய
வெள்ளையாய்
நிரம்பியிருக்கிறது
ஒரு துளி விந்து