Wednesday, October 30, 2019

தொட்டி மண்ணிற்குப் பழகும் வேர்கள்


விடுமுறை நாளுக்குப்பின்
திறக்கும் அறைக்குள்ளிருந்து
முகத்தில் பாய்கிறது வெப்பத்தின் நகங்கள்

முழுவீட்டை வெளியேற்றும்
தனியறையின் வெம்மை
நிறைக்கிறது நுரையீரல் பைகளை

பிரியமானவள் முதுகுப்பையில்
திணித்து அனுப்பிய நட்சத்திரங்கள்
குடிமேசையின் பியர் மூடிகளில் உறைகின்றன

துவைக்காத திருநாள் உடையின்மீது
கொசுமுட்டைகளின் கொலாஜ் சித்திரம்

பக்கத்து அறையிலிருந்து ஒலிக்கும்
தாபப் பாடலில் கல்லெறிகிறது
தெரு யாசகனின் பசித்த குரல்

தொட்டி மண்ணிற்குப் பழகும்
வேர்களை உறிஞ்சப் பற்றுகின்றன
அஜினமோட்டோவின் எட்டுக்கரங்கள்

சுவர்ப்பிடியை இழந்த பல்லி
இறக்கையற்ற கரப்பானாக
உருமாறி
ஓடத்தொடங்குகிறது
பொருள் தேடு நகர வீதிகளில்.


Saturday, October 12, 2019

திசைகள் சேர்கையில்


ஆசப்பட்ட பொம்ம
கைக்கிட்ட வந்திருச்சு
அதுக்குள்ள ஆசயெல்லாம்
வேற நெறம் மாறிடுச்சு
தேடிப்போன பாத தெரிஞ்ச பாத தான?
காலடியில் நிக்கிறத
ஊரெல்லாம் தேடுனயே
தேடுனியா இல்லியாண்டு
இத்தன நாள் தவிச்சிருந்தேன்
ஒங்கண்ண பாத்துப்புட்டேன்
சந்தோசம்,
போயிட்டு வா.
சேத்து வச்ச முத்தமெல்லாம்
ஒப்படைக்கத் தோணல இப்ப
ஒம்பாட்டுக்கு நீ போ
எங்கனவு எனக்குப் போதும்
வேறெதுவும் சொல்ல வேணாம்
என் ஊரு வந்துருச்சு.



எழுதிய நாள் 12 ஆகஸ்ட் 2019

எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்


நூலகத்தில்
ஒளியும் காற்றும் அதிகம் படா அடுக்கில்
ஒன்றின் தோளில் இன்னொன்றாக
சாய்ந்து நிற்கின்றன
கவிதைப் புத்தகங்கள்
துருவேறிய சங்கிலியின் கண்ணிகளென
புத்தகத்தின் எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
ஊர்ந்து செல்கின்றன
எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்
எடை குறைந்து நிற்கும் புத்தகங்களில்
இனி வாசிக்கலாம்
கவிஞன் எழுதாத
சில கவிதைகளை.




எழுதிய நாள் 12 செப்டம்பர் 2019

உப்புச்சிலை


அடையாளத்திற்கென ஒரு விரலை வைத்து
மூடிய புத்தகத்தோடு
காற்று வகுப்பெடுக்கும் ஜன்னலில்
பதிகிறாள் அவள்

விரல்வழி மேலேறி வருகிறது
ஒரு உப்புப் பாலை
இருவர் இருக்கையில்
உப்புச்சிலையாக அவள் ஒருத்தி

காற்று விசிறும் ஆணிகளை உள்வாங்கி
பாசி மூடிக்கொள்ளும் முகம்

இறுகிக்கொண்டே போகும்
கண்ணின் பனிக்குடம்
அந்தப் பெயரெழுதிய துளி விழுகையில்
உடையலாம்

பற்றிய இடத்திலிருந்து
விடாமல் வருகிறது ஒற்றை இழை
குச்சியின் சிறு பொறி போதும்
அறுத்துவிட

இழை தொட்ட
ஒரு புள்ளி ஈரப் பசைக்காக
உரசப்படாத தீக்குச்சியோடு
நீண்ட சாலையில்
போய்க்கொண்டிருக்கிறது
அவள் பேருந்து.



எழுதிய நாள்  30 செப்டம்பர் 2019

பெயர்களைச் சுமத்தல்


பெயர் மறந்து போன ஒருவரின் முகம்
நினைவில் வந்து வந்து போகிறது
அடர் நிறத்தவர்
தடித்த மீசை சிரிப்போடு இன்னும் அழகு
சற்றே குள்ளம்
மடித்த முழுக்கைச்சட்டையை
எப்போதும் இன்ஸெர்ட் செய்திருப்பார்
அகண்ட உள்ளங்கையால்
உறுதியாகக் கையைப் பற்றிக் கொள்வார்
சத்தமாகச் சிரிப்பார்
அவருடைய பெயர்....
அது சரி,
வெறும் பெயர்களைச் சுமந்து கொண்டு
என்ன செய்வது?!