Friday, November 6, 2009

நான், நட்சத்திரம் மற்றும் நம் காதல்


மின்னஞ்சல், தொலையழைப்பு
குறுஞ்செய்தி ஏதுமற்ற
ஏழு நாட்களின்
பின்னொரு நாளின் சந்திப்பை
சோடியம் விளக்குகள்
மரித்திருந்த பின் மாலைப்பொழுதில்
காத்திருந்தேன் நான்.

பேருந்து நிறுத்தத்தில்
சிந்திக் கிடந்த
இலையுதிர்க் காலத்தின் மீது
நீந்தித் திரிந்தது வானத்து நிலா.

வந்து நின்று போகும்
வாகனம் அனைத்திலும்
அளைந்து மீண்டது
காதல் சுமந்த-என்காத்திருப்பு.

என்னோடு வந்தமர்ந்த
தனிக்காகம் ஒன்று
இணை கண்டு கிளைமாறிய
காதல் கணத்தில்
வந்திறங்கினாய் நீ.

எட்டுமணி நேர அலுவல்
கீறிடாப் புதுமலராய்
எனக்குப்பிடித்த மஞ்சளுடையில் நீ.
சென்ற முறை புறங்கையில் நீ
முத்தமிட்டதைப் பார்த்த நட்சத்திரம்
மேகம் விலக்கிக் கண்ணடித்தது
இப்போது.

"எப்படி இருக்கிறாய் மலர்?"
நகை புகையும் காதல்
வழிந்த என் கேள்விக்கு
சூளையில் சுட்டெடுத்த
உன் பதில் மொழி கேட்டுச்
சிரித்தது அந்தக் காதல் நட்சத்திரம்...
"நான் உன்னைப் பார்க்க வரலை"
நானும் நம் காதலும் சேர்ந்து கொண்டோம்
அந்த நட்சத்திரச் சிரிப்பில்.

நிலையறிதல்

மனிதர்களை
மனிதர்களாய்
மாற்றுகிறவர்கள் மனிதர்களே;
குழந்தைகள் உருவத்தில்
இருக்கிறார்கள்.