Showing posts with label நெஞ்சின் தீ. Show all posts
Showing posts with label நெஞ்சின் தீ. Show all posts

Monday, January 8, 2018

அனிதா

என்ன பாப்பா நீ
இப்படிச் செஞ்சுட்ட?

நீதிமன்றத்து மொதப்படியில நீ நின்ன,
தெம்பாயிருந்தோம்.
காலுல சிக்குன அந்த நூல
அறுத்தெறிஞ்சிருவன்னு இருந்தமே
கழுத்த நெறிச்சிருச்சே பாப்பா.

வெள்ளக் கோட்டுக் கனவெல்லாம்
கருப்புப் போஸ்டரா ஒட்டிக் கெடக்குதே பாப்பா
இப்படிக் கருப்புச் சேதியா வர்றதுக்கா
அம்புட்டுக் கனவு?!

நாங்கெல்லாம் சொரணை கெட்டவிங்கன்னு
தெரிஞ்சு போச்சா ஒனக்கு?
ரோஹித்துக்கும் முத்துக்கிருஷ்ணனுக்கும்
நாங்க என்ன செஞ்சோம்னும்
தெரிஞ்சு போச்சு ஒனக்கு
அப்படித்தான பாப்பா?

ஒம்மேல நம்பிக்கையில்லாம
நீ செத்துட்டன்னு சொல்றாய்ங்க.

நீ மாண்டுக்கிட்டது
எங்க மேல நம்பிக்கையில்லாமத்தான பாப்பா?

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.

எழுதிய நாள் : 02-செப்டம்பர்-2017

எங்கள் உடை பச்சை

நாங்கள் பாதி மட்டுமே உடுத்தியிருந்தோம்
அது காவியில்லை, பச்சை.

நாங்கள் பேசிய மொழி
தேசியத்திற்குள் வராத தமிழ்.
எங்கள் தோலின் நிறம் கறுப்பு,
நிர்வாணமாக்கி அதையும் உறுதிப்படுத்திக் கொண்டீர்கள்.

நாங்கள் ஓட்டுச் சாதிக்காரர்களல்ல,
ஆண்மைக்குறைவினால் தற்கொலை செய்தவர்கள் போக
எங்கள் வாக்குச் சதவீதம் குறைவுதான்.

எங்களுக்கு வேறு குரல்கள் கிடையாது,
எங்கள் கரைவேட்டிக்காரர்களின் விரைகள்
நெறிபட்டுக் கிடக்கின்றன.

கோட்சேக்களின் வீதிகளில்
அரைநிர்வாணப் பக்கிரிகளாய் அமர்ந்திருந்தோம்.

நாங்கள் அறிவோம்,
அலைக்கற்றைகளின் அதீத வேகத்தில் காவி வளர்ந்து கொண்டிருக்கிறது தேசியக்கொடியில்.
அச்சாணி கழன்ற தர்மச்சக்கரத்தோடு எண்ணெய்க் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கின்றன வெள்ளையும் பச்சையும்.

எலிக்கறி தின்றோம்;
மாமிசம் உண்பவர்களென விலகிப் போனீர்கள்.
பாதித்தலை சிரைத்திருந்தோம்;
கழைக்கூத்தாடிகளெனக் கடந்தீர்கள்

நீங்கள் மண்ரொட்டி தின்னக்கூடாதென்றே
நாங்கள் மண்சோறு தின்றோம்.

நாளை
வாய்க்கரிசியும் இல்லாத நாளில்
எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
நாங்கள்
தமிழர்கள் இல்லை
இந்தியர்களும் இல்லை
வெறும் விவசாயிகள்.


தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் தீயில் எழுதியது.

எழுதிய நாள் : 17-ஏப்ரல்-2017

Friday, January 5, 2018

ஏழாம் நாள் காற்று

மிகுந்த மமதையுடன்
எரிந்து கொண்டிருக்கிறது
துரோகத்தின் தீ.

மடக்கிய முஷ்டிகளுக்குள்
வைராக்கியத்தின் வார்த்தைகளை மட்டுமே
வைத்திருந்தனர் எம் பிள்ளைகள்
அதில் வாட்களை
எங்கே கண்டீர் ஐயன்மீர்?

போர்க்களம் புதிதில்லை;
ஆனால் ஐயா,
கொண்டு வந்த வெள்ளைக்காகிதத்தில்
இரத்தத்தால் கிறுக்கி அனுப்பியிருக்கிறீர்கள்.

சூழ நின்றவர்கள்
எம் அண்ணன்கள் என்றே
அசராது நின்றன எம் கன்றுகள் .
உறவுகளை வேருடன் உலுக்கித் தள்ளியது
ஏழாம் நாள் காற்றில்
பரவிய விஷம்.

எம்குலத்தின்
குருடர்களைக் கொண்டே
குறி பார்த்துத் தாக்கினீர்,
அடுத்து நாங்கள்
அவர்களையும் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்.

முளைக்கும் தளிரினைக்
கிள்ளி எரிந்துள்ளீர்.
வெட்டிய இடம்
கிளைத்துத் துளிர்க்கும் என்பதை
படித்த நாங்கள் அறிவோம்,
நீங்களும் தெரிந்து கொள்வீர்கள்.

எரிந்து கொண்டிருக்கும் தீயினை
மண் பார்த்தது,
வான் பார்த்தது,
அவர்களும் பார்த்தார்கள்
நீங்களும் பார்த்தீர்கள்.
ஆனால் தோழர்களே
இது
மாற்றான் இட்ட தீயில்லை
நம் தோட்டக் காவலன் இட்ட தீ.
எரிந்து கொண்டேயிருக்கும்.
அணைந்து முடியும் நேரம் ,
அத்தனை கணக்குகளும்
சரி செய்யப்பட்டிருக்கும்.



மெரினாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டத்தைக் கலவரமாக்கிக் கலைத்ததை முன்வைத்து….
எழுதிய நாள் : 26 ஜனவரி 2017