உன்னைப்போல் இல்லை நீ விட்டுச்
சென்ற கண்ணீர்
என் வீட்டுத் தண்ணீரில்
உப்பு அதிகமென்றது
உன்னைவிட எனக்கு நகைச்சுவை
உணர்வு குறைவென்றது
பகல் வெளிச்சம் அதற்குக்கூச்சம்
தருவதாயிருக்கிறது
இரவுகளில் உன் கண்ணீர் மிகவும்
மகிழ்ச்சியாயிருக்கிறது
குளியலறையில் நான் வெகுநேரம்
இருப்பதில்லையெனக்
குறைப்பட்டுக்கொண்டது
வேறு வேறு குரல்களைக் கேளாமல்
சுணங்கிப்போனது
பக்திப்பாடல்களை ரசித்துக்கேட்டது
சமையலறை நெடியை ஆழச் சுவாசித்தது
எல்லாப் பாடல்களுக்கும்
வாயசைத்தது
தோட்டச்செடிகளிடம் உரக்கப்
பேசியது
மதுப்புட்டிகளை கூர்ந்து
பார்த்தது
படுக்கையறைச் சுவர்களில்
குரல்களைக் கிறுக்கியது
நாட்குறிப்பின் தாள்களில்
நிரம்பி வழியும்
உன் கண்ணீரை என்னால் கையாள
முடியவில்லை
உடனே வந்து கூட்டிச்செல்.
எழுதிய நாள் 17 செப்டம்பர் 2018
No comments:
Post a Comment