சா்ப்பமூறும் ஆப்பிள் மரங்களில்
பச்சை இருளுக்குள் ஏவாளைத்
தேடிப் பயணம்.
குளத்துநீா்ப் பாசியைப்போல்
உள்ளிழுத்து மூடிக்கொண்டது
காடு.
முயங்கிக்கிடந்த மரக்கிளைகளுக்கு
வெளியே
வெற்றுக்கால்களால் சூரியன்
தூரப்பாலை நோக்கிப் போயிருந்தான்.
கதகதப்பிலிருந்து வெளிவந்த
விதையிலைகள் சோம்பல் முறித்தன
இருதிசைகளில் கைகளை நீட்டி.
ஈரவயிற்றால்
பூமியை உந்தித்தள்ளும் நத்தையோடு
கதைபேசி நடந்துகொண்டிருந்தது
கருப்புமுயல்.
ஏவாளின் வாசனை வந்த திசையில்
ஆடைகளைக் களைந்து ஓடினேன்.
வானம் நோக்கிய கண்ணீரோடு
நட்சத்திரத்துக்காகக் காத்திருந்தாள்
நிறைசூல் வயிற்றுக்காரி.
மூக்கில் காயம் கொண்டவளும்
இன்னொருத்தியும் நீராடிக்கொண்டிருக்க
பத்துக்குரல்களில் பாடிக்கொண்டிருந்தான்
காவல் நின்றவன்.
ஒற்றைமுலைக்காரியின் ஏக்கப்பார்வை
கடந்து
மறைவிலிருந்து வந்த அம்புக்குத்
தப்பித்து
வெண்பூக்கள் உதிரும் மரத்தடியில்
ஏவாளைத் தேடிக் களைத்தமர்கிறேன்.
தொப்பூழ்க் குழியிலிருந்து
வியர்வை வடிய
தலையில் மெள்ள முளைக்கிறது
கொம்புகள் இரண்டு.
No comments:
Post a Comment