Mr. Malaysia
vasudevan,
உங்களையெல்லாம் என்ன செய்வது?
நீ ஆண்களின் கண்ணீர்.
அவர்களின் மதுவுக்கான கலவைப்பானம்
நீ.
தகப்பன்கள் தூக்கியலையும்
பழைய காதல்.
பவுடர் வாசனையோடு கடந்து
போகும் வற்றிய நினைவு
திருவிழாவின் வளையல்காசு
கிடாவெட்டு முடிந்த ஊரின்
கலைத்துப்போட்ட பந்தல்
லாரி டிரைவர்களின் சமையல்
விறகு
கீதாரிகளின் பனிச்சாமம்
ஊர்ப்பொட்டலின் மதிய வெயில்
திருப்தியற்ற மலட்டுக் கலவியின்
பெருமூச்சு
கிழிசலின் வழி பாயும் ஊசியும்
நூலும்
சுருக்கங்கள் தடவிச் சிரிக்கும்
பீடிப்புகை
மேல்துண்டில் படிந்த மஞ்சள்
கறை
வழியனுப்பி விட்டு வருபவனின்
ஒற்றையடிப் பாதை
பஸ் டிரைவர்களின் நள்ளிரவுப்பானம்
உன் கல்லறையில் விழும் மலர்களில்
இவர்கள் கண்ணீரும் இருக்கும்.
என்றைக்குமான கைதட்டல் அது.
எழுதிய நாள் 6 அக்டோபர் 2018
No comments:
Post a Comment