சொல்லாத
வார்த்தைகளின்
முடைநாற்றத்தால்
நிறைந்திருக்கிறேன்
நான்.
நிறுத்தத்தைத்
தவறவிட்ட
பயணியைப்போல்
என்னுடனே
பயணிக்கின்றன
பல வார்த்தைகள்.
இரத்தம்
பொங்கும் சில வார்த்தைகள்,
கடைசிச்
செங்கல்லாய் சில,
தீட்டிய
கூர்மையுடன் சில,
வீட்டுச்
சுவற்றைத் தாண்டவிடாத
முரட்டுச்
செல்லப் பிராணியைப்போல் சிலவென,
அவை
எனக்குள்
ஊர்ந்துகொண்டேயிருக்கின்றன.
கனவாய்
ஆவியானவை,
கனவை ஈரமாக்கியவை போல
தனிமைப்பொழுதுகளில்
கண்கள்
வழியே சில வெளியேறி
என் சுமையைச் சற்றே குறைக்கின்றன.
ஆயினும்
இன்னும்
வெளியேறாத வார்த்தைகள்
என் குரல்வளைக் காற்றை
விழுங்கியபடியிருப்பதை
கையறு மௌனத்தோடு பார்த்திருக்கிறேன்.
இந்தக்
கவிதையிலும் கூட
சொல்லாத
பல……
எழுதிய நாள் :
23 மார்ச் 2017
No comments:
Post a Comment