உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்,
நீ உன் திசையில் எங்கோ இருக்கிறாய்
ஆனாலும்….
சுய இரக்கம் அடர்ந்திருக்கும்
என் மதுக்குவளை
கைகளால் ஏந்தவியலாக் கனத்துடனிருக்கிறது.
அந்தரத்தில் அறுந்து தொங்குகின்றன
என் இரவுகள்.
தனிமையின் சுவர்கள் முழுவதும்
நம் உரையாடலைக் கிறுக்கியபடியிருக்கிறேன்.
என் அறையின் இசையில்
பெருகும் உன் வாசனை
இறுக்கிக் கொல்கிறது என்னை.
பிம்பங்களற்ற வெளியில் நிலைத்த கண்களில்
கணன்று கொண்டிருக்கின்றன.
உன் விரல் கோர்த்திருந்த நாட்கள்.
இந்த அனுதின வாதை விலக்க
உனதருகாமை வெப்பம் தவிர்த்து
வேறேதும் மீட்பில்லை.
மருந்தில் நனைத்தெடுத்த
மயிற்பீலிகளையெல்லாம்
நீ
தூர எறிந்துவிட்டாய் எனத்தெரியும்.
இருந்தாலும்
இந்த இரவுகளைக்
கடந்து செல்வதற்காக மட்டுமாவது
பேசவேண்டும் உன்னோடு.
எழுதிய நாள்: 22-செப்டம்பர்-2016
No comments:
Post a Comment