Friday, January 5, 2018

என் மீதான புகார்கள்

என் மீதான புகார்கள்
நிறைய இருக்கின்றன
என்னிடம்.

கலங்கிய பிம்பங்களிலிருந்து
பாயும் கூராயுதங்கள்
என் தசைகளுக்குள்
மெல்லப் புதைந்தபடியிருக்கின்றன.
எல்லாக் கோணங்களிலிருந்தும்
ஏதோ ஒரு அம்பு
என்னைத் துளைத்துக் கொண்டேயிருக்கிறது.

மெல்லப் பரவிப் பற்றும்
நேசத்தின் காற்றுக்காய்
பிளந்த செவுள்களுடன்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
இரத்தம் தோய்ந்த என் விரல்கள்.

இசையின் சுவர்களிலோ
மதுக்கோப்பையின் வேர்முண்டுகளிலோ
என் கண்ணீர்க் கொடிகளைப்
படரவிடுகிறேன்.

மன்னிப்பின் எல்லைகளுக்கப்பால்
நிற்கின்றன
என் புலம்பல்கள்.

தொண்டைக்குழியில்
நின்று கொண்டிருக்கும்
பைங்கசப்பினை
எத்தனை உதட்டு முத்தங்களும்
கழுவிடவில்லை.

எனக்கான ஒரு குரல்
தூரத்தில் வருவதான
மாயையைப் பற்றிக்கொண்டு
மெல்ல இளைப்பாறுகிறது
என் மூச்சுக் குழல்.

சிறு பரிகசிப்போடு
கடந்து செல்லும்
உருவங்கள் பலவற்றில்
என் சாயல் பார்த்த
குரூர நிம்மதியுடன்
திறந்த நிலத்தில்
ஒரு கல்லெனக் கிடக்கிறேன்.

மழையோ வெயிலோ
இடையறாது ஊற்றட்டும்
சாம்பல் அல்லது தளிர்
எதுவாகவோ சிதையட்டும்
நான்.



எழுதிய நாள் : 03 மார்ச் 2017

No comments:

Post a Comment