Thursday, January 4, 2018

நண்பா்கள் நாங்கள்

அணைப்பாய் தோள்களில் கைகளைப் போட்டுக்கொள்வோம்,
தோள் பலத்தைக் கண்கள் கணக்கிடும்.
சந்திக்கும்போதெல்லாம் மறக்காமல்
கைகுலுக்கிக் கொள்வோம்,
நட்புச் சித்தாந்தம் எதுவுமில்லை
நகங்களின் நீளம் அளப்பதற்காக மட்டுமே.
நண்பா்கள் என்றே அறியப்படுகிறோம்
அதுவே சிறந்த முகமூடியாயிருக்கிறது.
மற்றபடி விரியனின் விஷத்திற்கிணையான பேராயுதங்கள்
எங்களிருவாரின் சிரிப்பில் வைத்துள்ளோம்.
எனக்கெப்படியோ அப்படியேதான் அவனுக்கும்,
என்னையோ என் படைப்புக்களையோ
துளியும் பிடிக்காது.
ஆனாலும்
நாங்கள் நண்பா்கள் என்றே அறியப்படுகிறோம்
அதுவே சிறந்த முகமூடியாயிருக்கிறது.



எழுதிய நாள்: 01-ஜூலை-2016

No comments:

Post a Comment