Thursday, August 1, 2019

உன் கண்ணீர்


உன்னைப்போல் இல்லை நீ விட்டுச் சென்ற கண்ணீர்
என் வீட்டுத் தண்ணீரில் உப்பு அதிகமென்றது
உன்னைவிட எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவென்றது
பகல் வெளிச்சம் அதற்குக்கூச்சம் தருவதாயிருக்கிறது
இரவுகளில் உன் கண்ணீர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது
குளியலறையில் நான் வெகுநேரம் இருப்பதில்லையெனக்
குறைப்பட்டுக்கொண்டது
வேறு வேறு குரல்களைக் கேளாமல் சுணங்கிப்போனது
பக்திப்பாடல்களை ரசித்துக்கேட்டது
சமையலறை நெடியை ஆழச் சுவாசித்தது
எல்லாப் பாடல்களுக்கும் வாயசைத்தது
தோட்டச்செடிகளிடம் உரக்கப் பேசியது
மதுப்புட்டிகளை கூர்ந்து பார்த்தது
படுக்கையறைச் சுவர்களில் குரல்களைக் கிறுக்கியது
நாட்குறிப்பின் தாள்களில் நிரம்பி வழியும்
உன் கண்ணீரை என்னால் கையாள முடியவில்லை
உடனே வந்து கூட்டிச்செல்.





எழுதிய நாள்  17 செப்டம்பர் 2018

வேர்ப்பாதை


திசை வரையறைகள் மேல்

ஏறி நடக்கின்றன
வேர்களின் நீர்க்கால்கள்.
ஊன்றத் தலைப்படும்
விதையின் நாவிற்கு
வடிவங்கள் உயரங்கள்
எல்லாம் மண்.



நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள்  07 செப்டம்பர் 2018

இரண்டு வரி வாழ்க்கை


இரண்டு வாக்கியங்களுக்கிடையே
நடந்துவிடுகின்றன எல்லாம்
முதல்வாக்கிய வெள்ளம்
அடுத்த வாக்கியத்தில் சேறு வெடித்துக்கிடக்கிறது.
பருவமெய்தியவள் தோல் சுருங்குகிறது
வாழ்ந்த வீடு தூரம் போகிறது
சிவந்த காயத்தின் மீது பொருக்கு படர்கிறது
காதலியின் காதோரம் நரைக்கிறது
யானைகள் ஊருக்குள் வருகின்றன
மெழுகிய குழிமீது தும்பை மணக்கிறது
கோர்த்த விரல்களில் அட்சதை அரிசி
வலசைப் பறவைகள் ஊர் திரும்புகின்றன
ஒரு சம்போகத்தின் வியர்வை உடைக்குள் மறைகிறது
காதல் கடிதங்கள் டெலீட் செய்யப்படுகின்றன
வளைந்த முள்நுனியில் செவுள்கள்
அசைவை நிறுத்துகின்றன
பிடித்த ஆசிரியர் நம் பெயரை மறக்கிறார்
வழியும் கண்ணீரோடு முத்தம் பரிமாறப்படுகிறது
ஒற்றையடிப்பாதையொன்று உருவானது.
இரு வாக்கியங்கள் கொண்ட ஓடையின்
ஒரு கரையிலிருந்து
இன்னொரு கரைக்குத் தாவித்தாவி
ஆடிக்கொண்டிருக்கிறது
காலம்.





எழுதிய நாள்  31 ஆகஸ்ட் 2018