Saturday, October 12, 2019

உப்புச்சிலை


அடையாளத்திற்கென ஒரு விரலை வைத்து
மூடிய புத்தகத்தோடு
காற்று வகுப்பெடுக்கும் ஜன்னலில்
பதிகிறாள் அவள்

விரல்வழி மேலேறி வருகிறது
ஒரு உப்புப் பாலை
இருவர் இருக்கையில்
உப்புச்சிலையாக அவள் ஒருத்தி

காற்று விசிறும் ஆணிகளை உள்வாங்கி
பாசி மூடிக்கொள்ளும் முகம்

இறுகிக்கொண்டே போகும்
கண்ணின் பனிக்குடம்
அந்தப் பெயரெழுதிய துளி விழுகையில்
உடையலாம்

பற்றிய இடத்திலிருந்து
விடாமல் வருகிறது ஒற்றை இழை
குச்சியின் சிறு பொறி போதும்
அறுத்துவிட

இழை தொட்ட
ஒரு புள்ளி ஈரப் பசைக்காக
உரசப்படாத தீக்குச்சியோடு
நீண்ட சாலையில்
போய்க்கொண்டிருக்கிறது
அவள் பேருந்து.



எழுதிய நாள்  30 செப்டம்பர் 2019

பெயர்களைச் சுமத்தல்


பெயர் மறந்து போன ஒருவரின் முகம்
நினைவில் வந்து வந்து போகிறது
அடர் நிறத்தவர்
தடித்த மீசை சிரிப்போடு இன்னும் அழகு
சற்றே குள்ளம்
மடித்த முழுக்கைச்சட்டையை
எப்போதும் இன்ஸெர்ட் செய்திருப்பார்
அகண்ட உள்ளங்கையால்
உறுதியாகக் கையைப் பற்றிக் கொள்வார்
சத்தமாகச் சிரிப்பார்
அவருடைய பெயர்....
அது சரி,
வெறும் பெயர்களைச் சுமந்து கொண்டு
என்ன செய்வது?!

Sunday, August 4, 2019

நீளப்பாதை


பாதையின் நீளத்தைச் சொல்லும்
தோலின் சுருக்கங்கள்

சேரும் இடம் வரை துணையாய்
பொதியின் பாரம்
பேச்சுக் கேட்க காற்றெங்கும் காதுகள்
கால்களைத் துரத்தும் கனவுகள்
எதிர்ப்படும் ஒரு துளிப் புன்னகையும்
கைப்பிடி வார்த்தைகளும்
வெக்கை தணிக்கும்
பின்வரும் உனக்கும்


நண்பன் ஜெயேந்திரராஜனின் ஒளிப்படத்திற்காக

எழுதிய நாள் 05/08/2019