Thursday, November 27, 2014

என் உரையாடல்

எப்போதும் ஒரு உரையாடல்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது எனக்குள்.

பனையேறியின் காய்த்த ரேகைகளால்
தோல்பரப்பை அழுந்தத் தேய்த்துக்கொள்கிறேன்;
துளைகளற்ற தோலோடு
விளம்பரப் பொம்மைகளின் உள்ளிருப்பவனின்
வியா்வையாய் ஊா்ந்து கொண்டிருக்கின்றன
வாா்த்தைகள்.

மொசைக் தரையின் குழப்ப ஒழுங்கில்
என் புறப்பிம்பத்தைப் பின்னிக்கொண்டிருக்கின்றன
கண்ணாடித் தொட்டியுள் நீந்தியழியும்
என் மீன்கள்.

கவாத்துக்குத் தப்பி வெளியேறும்
சில கிளைகளையும்
காலொடிந்த புன்னகையாய்
உருப்பெயா்க்கும் என் உதடுகள்.

சுயபோகத்திற்கான ஒரு மூடிய அறையென
ஊடுபரவாச் சவ்வாக
ஏற்பாடு செய்து கொண்டேன் என்னை.

உரையாடல்களற்ற
இந்த மலட்டு உதடுகளை
கண்ணகியின் முலையென
அறுத்து வீசியென்னை
எாித்துவிடத் துடித்ததில்லை ஒருநாளும்.

Wednesday, September 3, 2014

பிள்ளைச் சுயவதை

உன்னைப் பார்க்கவும்
உன்னுடன் பேசவும் வேண்டுமென்றிருக்கிறது
ஆனால் இப்போது மாட்டேன்.

என்னறைக்குள் சுழலும் வெப்பக்காற்றில்
நம் முத்தங்களும் கண்ணீரும்
திசையிலியாய்த் திரியட்டும்.

வார்த்தைகளின் பாதங்கள் அலைந்த
பிரியத்தின் வயல் நடுவே
மழைச்சாலையின் மைல்கல் போன்றதொரு
மோனத்தில் மண்டியிட்டுயிருக்க வேண்டுமெனக்கு.

என் குரல்வளை மீது ஊர்ந்துகொண்டிருக்கும்
இந்த மெளனத்தின் அழுத்தம்
அதி நிச்சயமாய்
என் விழிகளில் உடைந்துருளும்.

புண்ணளையும் குரங்கென
சுவர்களற்ற சுயவதைக்கூடத்தில்
நம் வாசனையால் பதப்படுத்தப்பட்ட
நாட்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்குள் சுற்றித்திரியும்
சிறுகுருவியின் சிறகுகள் உடைக்கட்டும்
நம்மைச் சேகரித்து வைத்திருக்கும்
கண்ணாடிச் சீசாவை.
சீசாத் துகளுடன் தெறிக்கும் கண்ணீர்த்துளிகளை
என் இறுகிய உதடுகள் சுவைக்கும்
அக்கணம் வரை
உன்னைப் பார்க்கவோ பேசவோ வேண்டாம் நான்.

பறவைக்குறிப்புகள்

பறவைகள் நதிபோல
தானே திாிகின்றன.
வெளியின் பாிமாணங்களையோ
தூரத்தின் சாயத்தையோ
சிறகுகளில் சேமிப்பதில்லை.

பறவைகளை எண்ணுதல் எளிதாயிருப்பதில்லை
ஒவ்வொரு பறவையும் மற்றொரு பறவையை
வரைந்து செல்கின்றது தன் சிறகுகளால்.

பாடல், அகவல், கூவல்
இவற்றைக்காட்டிலும்
சிறகசைப்பே
சிறந்த பறவை மொழியாகிறது.

உதிரும் சிறகுகளை
நினைவிற் கொள்வதில்லை பறவைகள்,
கவிதைகளோ நாட்குறிப்போ சுயசாிதையோ எழுதுவதில்லை,
குறிப்பாய் அவை
பறவைகளைப் போல வாழ நினைப்பதில்லை.